கோப்புப்படம்

 
தமிழகம்

மெட்ராஸ் ரேஸ் கிளப் வழக்கு: ரூ.6.43 கோடி வசூலை 4 வாரம் நிறுத்திவைக்க ஐகோர்ட் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்திடமிருந்து சொத்து வரி பாக்கியாக ரூ.6.43 கோடியை வசூலிக்கும் நடவடிக்கைகளை தற்காலிகமாக 4 வாரங்களுக்கு நிறுத்திவைக்க சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு சொந்தமான சொத்துகளுக்கு கடந்த 2001-02 முதல் 2007-08 வரையிலான காலகட்டத்துக்கு சொத்து வரி பாக்கியாக ரூ.6 கோடியே 43 லட்சத்து 87 ஆயிரத்து 970-ஐ செலுத்தக்கோரி சென்னை மாநகராட்சி தரப்பில் கடந்த பிப்.6 அன்று நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்த நோட்டீஸை எதிர்த்து மெட்ராஸ் ரேஸ் கிளப் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

          

இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, சொத்து வரி பாக்கி தொடர்பாக தங்களது தரப்பு ஆட்சேபங்களை மாநகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொள்ளவில்லை என வாதிடப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, ரேஸ் கிளப் நிர்வாகத்திடம் சொத்து வரி பாக்கியை வசூல் செய்வதற்கான நடவடிக்கைகளை 4 வாரங்களுக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டுமென சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் பதிலளிக்கவும் மாநகராட்சிக்கு அறிவுறுத்தி, விசாரணையை 4 வார காலத்துக்குத் தள்ளி வைத்துள்ளார்.

SCROLL FOR NEXT