சென்னை: ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க தமிழக அரசு அமைத்துள்ளதைப் போலவே தண்டவாளங்களில் ஏஐ கேமராக்களை இரண்டு மாதங்களில் அமைக்க வேண்டும் என கேரள அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் - கேரள வனப்பகுதியில் தண்டவாளங்களை கடக்கும் யானைகள், ரயில் மோதி உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் ஜி.கே.முத்துகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது கேரள அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘கேரள வனப்பகுதியில் ரயில் தண்டவாளங்களை யானைகள் கடந்து செல்ல ஏதுவாக மூன்று சுரங்க பாதைகள் அமைக்க ரயில்வே துறை ஒப்புதல் அளித்துள்ளது. மதுக்கரை - கஞ்சிக்கோடு இடையே தண்டவாளங்களை ஒட்டி தடுப்பு அமைப்பதற்கு டெண்டர் நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளது’ என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க ஏஐ தொழில்நுட்ப கேமராக்களை தமிழக அரசு முதல் முறையாக பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், தமிழக அரசை பின்பற்றி, யானைகள் ரயில் மோதி பலியாவதை தடுக்க, கேரள வனப்பகுதிகளில் ரயில் தண்டவாளங்களில் ஏஐ கேமராக்களை இரண்டு மாதங்களில் பொருத்த வேண்டும் என கேரள மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், யானைகள் கடந்து செல்ல ஏதுவாக தண்டவாளர்களின் அடியில் சுரங்கப்பாதைகள் அமைக்க விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கேரள அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்தப் பணிகளை முடித்தது தொடர்பாக ரயில்வே துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.