நீதிபதி மஞ்சுளா
சென்னை: ‘விதி’ படத்தில் நடிகை சுஜாதாவின் கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்டு சட்டம் படித்ததாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா, வரும் 15-ஆம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். உயர் நீதிமன்றத்தின் சார்பில் அவருக்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நீதிபதி மஞ்சுளாவுக்கு பிரிவு உபசார உரை நிகழ்த்திய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் பேசும்போது, “பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைக்காக பெண் சிங்கமாக போராடியவர் நீதிபதி மஞ்சுளா. நாட்டிலேயே அதிக பெண் நீதிபதிகளை கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் ஒரு பெண் நீதிபதியை இன்று இழக்கிறது” என்று சுட்டிக்காட்டினார்.
கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் நீதிபதி மஞ்சுளா, 28 ஆயிரத்து 934 வழக்குகளில் தீர்ப்பளித்து இருக்கிறார். முதல் பெண் தபேதாரை தனக்காக நியமித்துக் கொண்டதும் நீதிபதி மஞ்சுளா தான் என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
பின்னர் ஏற்புரையாற்றிய நீதிபதி மஞ்சுளா, சட்டத்தை நான் தேர்ந்தெடுத்தேனா, சட்டம் என்னை தேர்ந்தெடுத்ததா என்ற ஒரு வியப்பு தனக்கு உள்ளதாக குறிப்பிட்டார்.
இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பை முடித்த பிறகு, முதுகலை அறிவியல் படிப்புகளுக்கு இடம் கிடைத்தும், விதி திரைப்படத்தில் நடிகை சுஜாதாவின் கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்டு சட்டம் படித்ததாக நீதிபதி மஞ்சுளா தெரிவித்தார்.
நீதிபதியாக இருப்பது எளிதல்ல என்றும் ராஜ்யங்கள் வீழலாம்; நீதிமன்றங்கள் நீடித்து நிலைக்கும் என தெரிவித்த அவர், இந்த நிரந்தரமான நீதிமன்றங்களின் தற்காலிக நிர்வாகிகளே நீதிபதிகள் என்றும் பணி ஓய்வு என்பதும் தற்காலிகம் தான் என்றும் தெரிவித்தார்.
நீதிபதி மஞ்சுளாவின் பணி ஓய்வை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 52 ஆக குறைகிறது. காலியிடங்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.