சென்னை: மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவில் தொகுதி மறுவரையறை, மக்கள்தொகை கணக்கெடுப்பு போன்ற நிபந்தனைகளைச் சேர்க்காமல் நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே சட்டமாக்கி அமல்படுத்தக்கோரி, மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில், ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி தலைமையில், 300-க்கும் மேற்பட்ட பெண்கள் சின்னமலையில் இருந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர். ஆனால், தடையை மீறி அவர்கள் செல்ல முற்பட்டதால் போலீஸார் அவர்களை கைது செய்தனர்.
இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.பிரமிளா, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் மஞ்சுளா, தேசியச் செயலாளர் ஏ.ஆர்.சாந்தி, அகில இந்திய முற்போக்கு பெண்கள் சங்கத்தின் தலைவர் பங்கேற்றனர்.