மு.வீரபாண்டியன் | கோப்புப் படம்

 
தமிழகம்

“ஸ்டாலினிடம் மம்தா கற்றுக் கொள்ள வேண்டும்” - மு.வீரபாண்டியன் அட்வைஸ்

செய்திப்பிரிவு

பாஜக-வை எதிர்த்துப் எப்படி பேசுவது என்பதை தமிழக முதல்வரிடம் இருந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளர் ஜே.ஜே.எபினேசருக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், வீடு வீடாகச் சென்று நேற்று வாக்கு சேகரித்தார். அதைத்தொடர்ந்து தி.நகரில் போட்டியிடும் ராஜா அன்​பழக​னுக்கு ஆதரவாகவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் செல்லும் இடமெல்லாம் திமுக கூட்டணிக்கு வாக்கு செலுத்த மக்கள் தயாராக இருக்கின்றனர்.

          

தமிழக முதல்வர் இன்றைக்கு முன்மொழியும் அரசியல், மத்திய அரசின் அதிகார குவியலுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கும் போராகும். மதுரையில் பாஜக-வுக்கு வாக்களித்தால் தான் மதுரை மெட்ரோ ரயில்வே திட்டம் நிறைவேற்றப்படும் என மஹாராஷ்டிரா முதல்வர், மிரட்டுகிறார். இந்த பிளாக் மெயில் எல்லாம் தமிழ் மண்ணில் எடுபடாது.

பிரதமர், உள்துறை அமைச்சர் என மத்திய அமைச்சர்களின் முகாமே சென்னையில் அமைந்தாலும் சரி, இந்த மண்ணில் பாஜக தோல்வி அடைவது உறுதி. திமுக-வும், காங்கிரஸ் கட்சியும் பாஜக-வுடன் இணக்கமாக இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியிருப்பது தவறு. இது அரசியல் அறியாமையின் பேச்சாகும். முதிர்ச்சியில்லாத அரசியல் கருத்துகளாகும். அரசியலில் மத்திய பாஜக அரசை எதிர்ப்பதற்கு எவ்வாறு பேசவேண்டும் என்பதை தமிழக முதல்வரிடம் இருந்து அவர் கற்றுக்கொள்ள வேண்டும்.

அதேபோல் தமிழக திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் அதிமுக-வுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதும் தவறான அரசியலாகும். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி முன்மொழிகிற அரசியலே பிழையானது. துணை முதல்வரைப் பற்றி அவர் பேசுவது எல்லாம் அரசியலா? தோல்வி பயத்தில் அவர் உளறுகிறார். அவர் பேசுவது அரசியல் அல்ல. தமிழக முதல்வர் பேசுவது தான் அரசியல். அது தான் எதிர்காலத்துக்கானது. பழனிசாமி எப்படி பேசினாலும் அவருக்கு தோல்வி நிச்சயம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT