“தமிழகத்துக்கு துரோகம் செய்பவர்களுக்கு ஒருபிடி மண்கூட கிடைக்காது” - கனிமொழி ஆவேசம்

“தமிழகத்துக்கு துரோகம் செய்பவர்களுக்கு ஒருபிடி மண்கூட கிடைக்காது” - கனிமொழி ஆவேசம்
Updated on
1 min read

தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்பவர்களுக்கு ஒரு பிடி மண் கூட கிடைக்காது என நாட்றம்பள்ளியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கனிமொழி பேசினார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஜோலார்பேட்டை தொகுதியில் தூத்துக்குடி எம்.பி., கனிமொழி நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டையில் நேற்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: கடந்த தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதனால், இந்த தேர்தலில் நாங்கள் தைரியமாக வாக்கு கேட்டு வந்துள்ளோம். திமுக அரசின் நலத்த திட்டங்களால் ஏதாவது ஒரு வகையில் ஒவ்வொரு வீடும் பயனடைந்துள்ளது. திமுக ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது.

ஆனால், எதிரணியில் இருப்பவர்கள் தேர்தலுக்கு, தேர்தல் மேடையில் கூடி வாக்கு கேட்கிறார்கள். தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யக்கூடிய அத்தனை பேரும் ஒரு அணியில் திரண்டு எதிரணியிலேயே நிற்கின்றனர்.இந்த தேர்தல் தமிழ்நாட்டை எதிர்க்கக் கூடியவர்களுக்கும், தமிழ்நாட்டுக்குமான தேர்தல்.

தமிழ்நாட்டில் இருந்து நிதியை பெறும் மத்திய அரசு தமிழகத்துக்கு தேவையான நிதியை தராமல் பிஹார், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் மாநிலங்களுக்கு ஒதுக்குகின்றனர்.மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.3,600 கோடி நிதி தருவதாக கூறுகின்றனர்.

தண்ணீருக்கான திட்டத்துக்கு கூட பணம் தரவில்லை. பிரதமர் மோடி வடஇந்தியாவில் தேர்தல் நடக்கும்போது தமிழகத்தில் வடஇந்தியர்களை மோசமாக நடத்துகிறார்கள் என கூறுகிறார். தமிழ்நாட்டுக்கு வந்தால், நான் தமிழனாக இருக்க ஆசைப்படுகிறேன் என கூறுகிறார்.

ஒவ்வொரு தேர்தலுக்கும் தங்களது நிலையை, சாயத்தை மாற்றக்கூடியவர்கள் தான் எதிரணியில் இருப்பவர்கள். கடந்த மக்களவை தேர்தலில் பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி இல்லை எனக் கூறினார்.ஆனால், இந்த தேர்தலில் அதனை மறந்துவிட்டார். அவருக்கு தெரிந்தது துரோகம் ஒன்றுதான்.

தமிழ்நாட்டுக்கு துரோகம், தன்னை உருவாக்கிய கட்சிக்கு துரோகம், அவருக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த ஒ.பி.எஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கிவிட்டார். இதையடுத்து அவர் தமிழ்நாட்டை காக்க நம்முடன் இணைந்துள்ளார். அவரிடம் இருந்து உண்மையை புரிந்துக்கொண்டு நம்மிடம் வந்து சேர்ந்தவர்கள் ஏராளம்.

துரோகங்களையே தொடர் கதையாக செய்யக்கூடியவர் பழனிசாமி. பாஜகவுடன் கூட்டணி வைக்கும் கட்சியை பாஜக எடுத்துக் கொள்ளும். இது பெரியார், அண்ணா, கலைஞரின் மண். தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்பவர்களுக்கு ஒருபிடி மண்கூட கிடைக்காது. திமுக வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் அமோக ஆதரவு தர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

“தமிழகத்துக்கு துரோகம் செய்பவர்களுக்கு ஒருபிடி மண்கூட கிடைக்காது” - கனிமொழி ஆவேசம்
‘கத்திக் கத்தி செத்துப்போ’ என என்னை சபித்துவிட்டனர் - சீமான் ஆதங்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in