சென்னை: புதிய மருந்தியல் கல்லூரிகளுக்கு ஆசிரியர்களை நிரந்தர அடிப்படையில் மட்டுமே நியமிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மருந்தியல் பட்டப்படிப்புக்கான 10 புதிய மருந்தியல் கல்லூரிகள் புதிதாக உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதிகளின் கீழ் முதல்வர் அறிவித்தார்.
அந்த கல்லூரிகள் தொடங்குவதற்கான அரசாணை கடந்த 16-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. புதிய மருந்தியல் கல்லூரிகளை தொடங்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறை ஒன்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தமிழ்நாடு மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநருக்கு அனுப்பி உள்ளார்.
அந்த, மருந்தியல் கல்லூரிகளில் அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் கண்டிப்பாக தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இது அப்பட்டமான தொழிலாளர் விரோதப்போக்காகும். வேலையில்லாமல் ஏராளமானோர் தவிக்கும் சூழலில், புதிய வேலை வாய்ப்புகளை நிரந்தர அடிப்படையில் உருவாக்காமல், தற்காலிக அடிப்படையில் உருவாக்கி, பணி நியமனங்களை செய்வது ஏற்கத்தக்கதல்ல.
இந்த அரசாணையை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மருந்தியல் கல்லூரி ஆசிரியர்களையும், பணியாளர்களையும் நிரந்தர அடிப்படையில் மட்டுமே நியமிக்க வேண்டும்.
இதற்கிடையே, மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், ‘தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டுக் காரணமாக தொழிற்சாலைகள், மின்சார பம்பு செட்டுகளை நம்பியுள்ள விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளன. காலாண்டுத் தேர்வுகளுக்காகப் படிக்கும் மாணவர்களும் படிக்க முடியாமல் கடும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். மின்தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசின் பொதுத் தொகுப்பிலிருந்து பெறப்படும் மின்சாரத்தை அதிகரிக்க வேண்டும்.
தமிழகத்தின் அதிகரித்துவரும் மின்சாரத் தேவைக்கு ஏற்ப, புதிய மின்நிலையங்களை உருவாக்க, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் புதிய மின் நிலையங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.