மு.வீரபாண்டியன்
சென்னை: “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்து, ரத்து செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை சீராய்வு செய்யும் புதிய மனுவை தமிழக அரசு தாக்கல் செய்து, இடைக்கால உத்தரவை செயலிழக்க செய்ய வேண்டியது உடனடி தேவையாகும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சர்வே கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலதுசாரி சங் பரிவார் அமைப்புகளின் தவறான கோருதலை ஏற்கும் வகையில் தீர்ப்பு அமைந்துள்ளது.
இந்த ஆண்டு மட்டும், அதுவும் ஒரே ஒருநாள் மட்டும் தீபம் ஏற்றலாம் என்பது அங்கு சில நூற்றாண்டுகளாக நடைமுறை வழக்கமாகவும், பாரம்பரியமுறையாகவும், சமூக நல்லிணக்கத்துடன் நடந்து வரும் தீபத் திருவிழா முறையை முறிப்பதும், புதிய முறையை அறிமுகப்படுத்துவதும் சமூக நல்லிணக்கத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்பதை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளாதது வியப்பளிக்கிறது.
சட்டத்தின் அடிப்படையிலும், உரிய வரலாற்று ஆதாரங்கள் மற்றும் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிமன்றம், நம்பிக்கையின் அடிப்படையில் இத்தகைய ஓர் இடைக்கால தீர்ப்பு வழங்கியிருப்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறான மதச்சார்பின்மைக்கு எதிரானதாகும். எனவே, உடனடியாக இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்து, ரத்து செய்ய வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சீராய்வு செய்யும் புதிய மனுவை தமிழக அரசு தாக்கல் செய்து, இடைக்கால உத்தரவை செயலிழக்க செய்ய வேண்டியது உடனடி தேவையாகும்.
திருப்பரங்குன்றத்தில் வழிவழியாக பாதுகாத்து வரும் மதநல்லிணக்கத்தை உறுதி செய்திட, அனைத்து பிரிவு மக்களும் ஒன்றுபட்டு நல்லிணக்கம் மற்றும் அமைதியை பாதுகாக்க முன்வர வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.