புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்.
புதுக்கோட்டை: தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஊரெங்கும் கட்சிக் கிளை இருந்தும் பெரியளவில் வெற்றி பெற முடியாதது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு மற்றும் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவின் நூற்றாண்டு பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில், மு.வீரபாண்டியன் பேசியது: தமிழகத்தில் ஊரெங்கும் கட்சிக் கிளை இருந்தும் பெரியளவில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. வெற்றிக்கு சாதி, மதம், பிரதேசம் போன்ற கூறுகள் தடையாக உள்ளன. எங்களால் அதிகாரத்துக்கு வர முடியாவிட்டாலும், அரசியல் தெளிவில் எங்களுக்கு நிகர் யாருமில்லை.
தேர்தலுக்காக திமுக ரூ.15 கோடி கொடுத்தது உண்மைதான். தேர்தலுக்கு செலவாகி விட்டது. இதைப் பெரிதாக பேசுகிறார்கள். ஆனால், தேர்தல் செலவுக்காக பாஜக பல ஆயிரம் கோடி வாங்கி உள்ளதே? அதற்கு என்ன பதில்?.
100 ஆண்டுகளில் எந்த ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல், சாதி மற்றும் மதக் கலவரத்தை தூண்டாத கட்சியாக இந்திய கம்யூனிஸட் உள்ளது. இதைவிடவேறு என்ன சாதிக்க வேண்டும்?.
பிரிவினை கருத்துகளை முன்வைத்து அரசியல் செய்து வரும் பாஜகவுக்கும், கூட்டணி வைத்துள்ள அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பலத்த அடி விழும். பிரதமர் மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் அருகில் வைத்துக்கொண்டு வாக்கு கேட்டால் அதிமுகவுக்கு வாக்களித்து விடுவார்களா?. எத்தனை கட்சிகள் கூட்டணி அமைத்து வந்தாலும் திமுக கூட்டணியே வெல்லும் என்றார்.
கட்சியின் ஒன்றியச் செயலாளர் சி.தமிழ்மாறன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் முத்து உத்திராபதி, மாவட்டச் செயலாளர் த.செங்கோடன் உள்ளிட்டோர் பேசினர்.