சென்னை: ‘கோவையில் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை உருவாக்கிய பெருமை திமுகவுக்கே உரியது’ என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடத்தைத் தொடர்ந்து, திமுக அரசின் மற்றொரு முக்கியத் திட்டம் மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறிவுலகம் கோவையில் திறக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
கடந்த 2024-25-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், கோவையில் பிரம்மாண்ட நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 2024 நவ.6-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு, கோவை மத்தியச் சிறைக்குச் சொந்தமான இடத்தில் 1.98 லட்சம் சதுரஅடி பரப்பளவில், தரை தளம் மற்றும் 7 தளங்களுடன் சுமார் ரூ.300 கோடியில் இந்த அறிவுலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரியில் கோவை சென்றபோது, கட்டுமானப் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்திருந்தன. அப்போதே நூலகத்தைத் திறக்கலாம் என்று பலரும் தெரிவித்தனர். ஆனால், ‘முழுமையாகப் பணிகள் நிறைவடைந்த பின்னர் திறந்தால் போதுமானது’ என்று கூறினேன்.
திறப்பதில் என்ன பெருமை?
யார் திறந்து வைக்கிறார்கள் என்பதில் என்ன பெருமை இருக்கிறது? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதில்தான் உண்மையான பெருமை இருக்கிறது. தமிழகத்தில் அந்தப் பெருமை திமுகவுக்கே உரியது.
கோவை மட்டுமல்ல, திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பீட்டில் காமராஜர் பெயரில் பிரம்மாண்ட நூலகம், நெல்லையில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் பெயரிலான மாபெரும் நூலகம், சேலத்தில் ரூ.104 கோடியில் பாரதிதாசன் அறிவுலகம், கடலூரில் ரூ.98.26 கோடியில் அமையவுள்ள அஞ்சலை அம்மாள் அறிவுலகம், இவையனைத்தும் வெகு விரைவில் அடுத்தடுத்து திறப்பு விழா காணவிருக்கின்றன.
நூல்கள் வழிகாட்டும்
பெரியார் அறிவுலகத்தின் அறிவியல் தொழில்நுட்ப அரங்கில் உள்ள பிரமிட் வடிவிலான கணினி மேசையில் பொறிக்கப்பட்டுள்ள ‘நான் முதல்வன்’ என்ற பெயர் மறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. ‘முதல்வன்’ என்ற சொல்லைக் கண்டாலே மக்களுக்கு ஸ்டாலின் நினைவுக்கு வந்துவிடும் என்று எதிரிகள் அஞ்சுகின்றனர்.
இது ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வெற்றி. அறிவுச் செயல்பாடுகளுக்கு எந்தத் தொடர்புமற்ற, அறிவார்ந்த சமூகத்தின் மேல் ஒவ்வாமை கொண்ட இந்த மூடர் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தே தீரும். அதை நிறைவேற்றுவதில், நாம் அமைத்த நூலகங்களும், வெளியிட்ட நூல்களும் நிச்சயம் பங்களிக்கும்.
கோவை மக்களே, திராவிட மாடல் அரசில் நாம் திறந்து வைத்த செம்மொழிப் பூங்காவுக்குத் திரளாகச் செல்வதைப் போல, பெரியார் அறிவுலகத்தையும் அனைவரும் சென்று பாருங்கள்.
கோவைக்கு உங்கள் உறவினர், நண்பர் வந்தாலும், ‘பாருங்கள் எங்கள் அறிவுலகத்தை’ என பெருமையோடு அழைத்துச் சென்று காட்டுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.