தமிழகம்

காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாகிறது: மீன்பிடி படகுகள் கரை திரும்ப உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை (நவ.13) உருவாகிறது. இதன் காரணமாக, கிழக்கு கடற்பகுதிகளில் மீன்பிடிக்கச் சென்றுள்ள படகுகள் அனைத்தும் இன்று இரவுக்குள் கரை திரும்புமாறு தமிழக மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு அந்தமான் பகுதிகளின் மேல் 5.8 கி.மீ. உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை (நவ.13) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது வடமேற்காக நகர்ந்து 14-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், 15-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறக்கூடும்.மேலும், மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் 900 மீட்டர் உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இவற்றின் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக மீன்வளத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே, தினசரி கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் நாட்டுப் படகுகள் உட்பட கிழக்கு கடற்பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து வகையான படகுகளும் இன்று (நவ.12) இரவுக்குள் கரைக்குத் திரும்ப வேண்டும். நாளை (நவ.13) முதல் மறு உத்தரவு வரும் வரை படகுகளுக்கு மீன்பிடி அனுமதிச் சீட்டு வழங்கப்படாது’’ என கூறப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT