தமிழகம்

எப்.சி கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி பிப்.25 முதல் காலவரையற்ற லாரி ஸ்டிரைக்

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

கி.பார்த்திபன்

நாமக்கல்: லாரிகளுக்கான பல மடங்கு எப்.சி கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி, வருகிற 25-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற லாரி ஸ்டிரைக் போராட்டம் நடைபெறும் என மாநில சம்மேளன கூட்டத்தில் தீர்மானம் நிறைவற்றப்பட்டது.

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயற்குழு கூட்டம் இன்று நாமக்கல்லில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. சம்மேளன தலைவர் தன்ராஜ் கூட்டத்துக்கு தலைமை வகித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஒரு லாரிக்கு தகுதி சான்று (எப்.சி) பெறுவதற்கான ரூ.850 கட்டணத்தை, மத்திய அரசு ரூ.28,200 ஆக உயர்த்தி உள்ளது. இதை அமல்படுத்துவதும், நிறுத்தி வைப்பதும் மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் உள்ளது. பல மாநிலங்களில் இந்த கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த எப்.சி கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி தமிழக அரசிடம் பல முறை கோரிக்கை விடுத்தோம். சுமார் 3 மாதங்களாகியும் இதுவரை தீர்வு காணப்படவில்லை. அதன் காரணமாக, தமிழகம் முழுவதும், ஒரு லட்சம் லாரிகள் தகுதி சான்று பெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சரக்கு ஆட்டோ, வேன் (எல்சிவி) உள்ளிட்ட லட்சக்கணக்கான வாகனங்கள் எப்.சி செய்யாமல், ஓட்ட முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தொடர்ந்து எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஸ்டிரைக் போராட்டத்தில் ஈடுபட இன்றைய கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்.

மத்திய அரசு உயர்த்தியுள்ள பல மடங்கு எப்.சி கட்டணத்தை ரத்து செய்யக்கோரி, வருகிற 25-ம் தேதி நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் காலவரையின்றி லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் ஓடாது. சுமார் 20 லட்சம் வாகனங்கள் இந்த ஸ்டிரைக்கில் கலந்துகொள்ளும்.

வெளி மாநில லாரிகள் உள்ளிட்ட அனைத்து லாரிகளும் தமிழகத்தில் இயங்காது. இக்கோரிக்கையை வலியுறுத்தி, தஞ்சை, கும்பகோணம், திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களில், கடந்த 16-ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் உள்ளன. இந்த தொழிலை நம்பி சுமார் 1.5 கோடி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளனர். எங்களின் கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு செல்ல வேண்டும் என்ற நோக்கில் ஸ்டிரைக்கை அறிவித்துள்ளோம்” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT