ராகுல் காந்தி
கன்னியாகுமரி: “திராவிட சித்தாந்தத்தை வெறுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும் சித்தாந்தத்தையும் ஒருபோதும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; அதற்கு சரணடைய மாட்டார்கள் என்று அவர்களுக்கு தெரியும். அதனால் தான் அதிமுகவின் மூலம் தமிழகத்தில் கால் பதிக்க நினைக்கிறார்கள்.” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, “அனைத்து மாநிலங்களின் மொழி, கலாச்சாரம் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தனிப்பட்ட மொழி, வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், உரிமைகள் சிதைக்கப்பட கூடாது. தமிழ் மொழிக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது.
பாஜக ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே வரலாறு இருக்க வேண்டும் என நினைக்கிறது. கூட்டாட்சி தத்துவத்தை பலவீனம் ஆக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆள நினைக்கிறது.
மணிப்பூரில் என்ன செய்தது பாஜக?. அமைதியான மாநிலத்தில் இன்னும் உள்நாட்டு போர் நடந்து கொண்டு இருக்கிறது. நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடித்துள்ளோம்.
தமிழகம் இந்தியா முழுமைக்கும் ஒரு முற்போக்கான பார்வையை கொடுத்துள்ளது. பிளவுவாத அரசியலை வளர்க்கும் பாஜக, ஆர்எஸ்எஸை எதிர்த்துப் போராடுவதே நம் அரசியல் களம். எங்கெல்லாம் வாய்ப்பு உள்ளதோ அங்கெல்லாம் டெல்லியில் இருந்து ஆட்சி செய்ய விரும்புகிறது பாஜக. ஆனால் நாங்கள் தமிழகத்தை தமிழகத்தில் இருந்துதான் ஆள வேண்டும் என நினைக்கிறோம்.
தமிழகத்தில் நீண்ட கால வரலாறு உள்ள இயக்கத்தை (அதிமுக) பாஜக கைப்பற்றி இருக்கிறது. அவர்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரிய பங்காற்றி இருக்கிறார்கள். அதிமுக மூலம் தமிழகத்தில் கால்பதிக்க பாஜக முயற்சி செய்து வருகிறது.
தற்போதைய அதிமுக வெற்று கூடாக மாறியிருக்கிறது. தற்போது அதிமுக, பாஜக தமிழகத்தில் நுழைவதற்கான கருவியாக மாறிப் போய் இருக்கிறது. பிரதமர் மோடியை ட்ரம்ப் கட்டுப்படுத்தி இருப்பதைப் போல, மோடியும் அதிமுகவை கட்டுப்படுத்த நினைக்கிறார்.
நான் ஒவ்வொரு முறையும் தமிழகம் வரும்போது காமராஜரை நன்றியோடு நினைவு கூறுகிறேன்.
திராவிட சித்தாந்தத்தை வெறுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும் சித்தாந்தத்தையும் ஒருபோதும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; அதற்கு சரணடைய மாட்டார்கள் என்று அவர்களுக்கு தெரியும். அதனால் தான் அதிமுகவின் மூலம் தமிழகத்தில் கால் பதிக்க நினைக்கிறார்கள். அதிமுகவின் தற்போதைய தலைவர்கள் ஊழலில் திளைத்த காரணத்தினால் மோடியிடம் சரண் அடைத்துவிட்டனர்” இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், தமிழ்நாடு அரசின் 5 ஆண்டுகால திட்டங்கள் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பட்டியலிட்டுப் பேசினார் ராகுல் காந்தி.