உள்படம்: தாமரைச்செல்வன்
மதுரை: தமிழகத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த 3-வது புதிய எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரைக் கோட்ட மூத்த லோகோ பைலட் தாமரைச் செல்வன் இயக்கினார். திருச்சியில் பல்வேறு நலத் திட்டங்கள் தொடக்க விழாவில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்றார்.
அப்போது, நெல்லை- மங்களூரு, ராமேசுவரம் - மங்களூரு (வாராந்திர ரயில்), நாகர்கோவில்- சாரளப்பள்ளி அம்ரித்பாரத், கோவை- தன்பாத் அம்ரித்பாரத் மற்றும் மயிலாடுதுறை- திருவாரூர்- காரைக்குடிக்கான பயணிகள் ரயில் என 5 புதிய ரயில்களை பிரதமர் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
இதன்படி, ராமேசுவரம் - மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரையைச் சேர்ந்த லோகோ பைலட் (ரயில் ஓட்டுநர்) தாமரைச் செல்வன் இயக்கினார். இதன் சிறப்பு என்னவென்றால் மூன்றாவது முறையாக தமிழகத்தில் பிரதமர் தொடங்கி வைத்த புதிய ரயிலை இயக்கும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி பிரதமர் தொடங்கிவைத்த மதுரை- சென்னை தேஜஸ் அதிவிரைவு ரயில், 2025 ஏப்ரல் 6-ல் புதிய பாம்பன் பாலத்தில் முதல் ரயிலை பிரதமர் தொடங்கி வைத்தபோது அந்த ரயிலையும் இவர்தான் இயக்கினார்.
இதன் தொடர்ச்சியாக நேற்று திருச்சி விழாவில் பிரதமர் தொடங்கி வைத்த ராமேசுவரம் - மங்களூரு ரயிலையும் இவர் இயக்கினார். தாமரைச்செல்வன் கடந்த 1994-ம் ஆகஸ்ட்டில் தென் மத்திய ரயில்வே பிரிவான ஹூப்ளி கோட்டத்தில் உதவி பைலட்டாக பணியில் சேர்ந்தார்.
தற்போது தெற்கு ரயில்வேயில் உள்ளார். இவர் தனது 32 ஆண்டு பணிக் காலத்தில் அயல் பணிக்கு செல்லாமல் தொடர்ந்து ரயில் ஓட்டுநராகவே பணியாற்றி வருகிறார்.இன்று 60 வயதை நிறைவு செய்கிறார்.
31-ல் ஓய்வு பெறுகிறார். 3 முறை புதிய ரயில் இயக்கும் வாய்ப்பைப் பெற்றவர் இவர் மட்டுமே.