தமிழகம்

கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களை பரிசீலிக்க மத்திய அமைச்சரிடம் எல்.கே.சுதீஷ் எம்.பி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘கோவை, மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்’ என மத்திய அரசிடம் தேமுதிக பொருளாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான எல்.கே.சுதீஷ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் மனோஹர் லால்யை எல்.கே.சுதீஷ் எம்.பி நேரில் சந்தித்து மனு அளித்தார். அதில், ‘கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை முன்னுரிமையுடன் பரிசீலித்து, தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். தொழில் மற்றும் வர்த்தகத்தின் முக்கிய மையமாக விளங்கும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைவது தொழில் வளர்ச்சிக்கு மேலும் வலு சேர்க்கும்.

தென் தமிழகத்தின் முக்கியமான வளர்ச்சி மற்றும் சுற்றுலா நகரமாகத் திகழும் மதுரையில் இத்திட்டம் நகர்ப்புற போக்குவரத்தை எளிதாக்கும். இவ்விரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம் கடும் போக்குவரத்து நெரிசல் குறைந்து, பொதுமக்களின் பயண நேரம் பெருமளவில் மிச்சமாகும்’ என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எல்.கே.சுதீஷ் கூறும்போது, “தமிழக மக்களின் அத்தியாவசிய தேவைகளை மத்திய அரசின் கவனத்துக்கு தொடர்ந்து கொண்டு சென்று, மாநிலத்தின் நகர்ப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக நாடாளுமன்றத்திலும் மத்திய அமைச்சர்களிடமும் குரல் கொடுப்பேன்” என்றார்.

SCROLL FOR NEXT