ஆவடி: ஆவடி மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி இருந்த நிலையில், உணவை உட்கொண்ட 40-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆவடி மாநகராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் தினமும் காலை 8 மணிக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.
ஐதராபாத்தை சேர்ந்த தனியார் ஒப்பந்தாரர் ஆவடி சின்னம்மன் கோயில் அருகில் சமையல் கூடம் அமைத்து உணவு தயாரித்து அனுப்பி வைக்கிறார். இந்நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் துய்மை பணியாளர்கள் காலை உணவு உண்டனர்.
அப்போது 48- வது வார்டில் உள்ள ஊழியர்கள், சாம்பாரில் பல்லி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே ஆவடி அரசு மருத்துவமனையில் பலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
40-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் பலரது உடல்நிலை சிறிது நேரத்தில் சீரானது. 4 பேருக்கு மட்டும் உடல்நிலை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு டிரிப்ஸ் ஏற்றப்பட்டது.
இத்தகவல் அனைத்து ஊழியர்களுக்கும் பரவியதால் ஏராளமான தூய்மை பணியாளர்கள் விரைந்து வந்து மருத்துவமனையில் முதுலுதவி சிகிச்சை பெற்றனர்.
இது குறித்து ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: உணவு பாதுகாப்பு துறை மூலம் 21 இடங்களில் வழங்கப்பட்ட உணவு மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளோம்.
மாநகராட்சி அங்கீகரிக்கப்பட்ட உணவு தயாரிக்கும் நிறுவனத்தின் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. உணவு மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தவறு கண்டறிந்தால் அந்த நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.