சென்னை: தேர்தலையொட்டி தமிழகத்தில் 4 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப். 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், சுதந்திரமான மற்றும் அமைதியான தேர்தலை உறுதிசெய்யும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்ஒரு பகுதியாக, தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
வாக்குப்பதிவு நடைபெறும் ஏப். 23-ம் தேதி அதற்கு முன்பாக ஏப். 21, 22 ஆகிய தேதிகள் என தொடர்ந்து 3 நாட்களும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ம் தேதியும் மதுக்கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், “வாக்குப்பதிவு நாளான்றும் வாக்கு எண்ணிக்கையின் போதும் பிரச்சினைகள் ஏற்படாமல் அமைதியான சூழல் இருக்க வேண்டும் என்பதால் கடைகள் மூடப்படுகின்றன. வாக்காளர்களுக்கு மது கொடுத்து வாக்குகளைக் கவர்வது போன்ற செயல்கள் நடக்க வாய்ப்புள்ளதால் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கு 2 நாட்களுக்கும் முன் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றனர்.