தென்காசி: கோவையைத் தொடர்ந்து, தென்காசி மாவட்ட மைய நூலகத்திலும், ரூ.27 லட்சம் மதிப்பில் 2,293 போலி புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் நடந்த முறைகேடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இதில், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் 2,293 புத்தகங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பல புத்தகங்களின் விலை ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தது. இந்த புத்தகங்களை நூலக அலுவலர்கள் அப்புறப்படுத்தி, தனி அறையில் வைத்துள்ளனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.27 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அகற்றப்பட்ட புத்தகங்கள் நிவேதா அன்பழகன், நிவேதா சுப்பையா, மனிஷா சரவணன், மனிஷா ஆகாஷ், மனிஷா சுப்பிரமணியன், மனிஷா அர்ஜுன், மோகனா ரவி, மோகனா பால்ராஜ், கலா முருகன், தாமரை பன்னீர், ரிஸ்தேவன் மகேந்திரன், அனுஷா தனுஷ், சூர்யா அனுஷ்கா உள்ளிட்ட பல்வேறு அறியப்படாத பெயர்களில் எழுத்தாளர்கள் எழுதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் கடந்த 2019-ம் ஆண்டு புதிதாக தொடங்கப்பட்டது. இங்குள்ள இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மாவட்ட மைய நூலகம் கட்டப்பட்டது. இதனை, 2025-ம் ஆண்டு அக்.29-ம் தேதி அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். பின்னர், நூலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து நூலகத்துக்கு வந்த புத்தகங்களில் போலி புத்தகங்களும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.