தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் பவள விழா மற்றும் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது. கல்லூரியின் முன்னாள் மாணவரும், இந்திய குடியரசு துணைத் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தாம் பயின்ற பழைய வகுப்பறைக்குச் சென்று, தனது கல்லூரிப் பருவ நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். 1975- 1978-ம் ஆண்டு தன்னுடன் பிபிஏ பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பிலும் பங்கேற்ற அவர், தனது வகுப்புத் தோழர்களுடன் கலந்துரையாடி, பழைய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார். அவர்களுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் நடந்த விழாவில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
தேசிய உணர்வு தமிழகத்தை விட்டு ஒரு போதும் மாறாது, மறையாது. பாரத தேசம் தேசபக்தி உணர்வால் ஒன்றுபட்டிருக்கிறது. இந்த தேசம் ஒருங்கிணைந்த தேசமாக இருப்பதால்தான் வேலைவாய்ப்பு அதிகரித்திருக்கிறது. பெரிய பொருளாதார வாய்ப்பு உருவாகியிருக்கிறது. இந்த தேசம் ஒருமைப்பட்ட தேசமாக இருக்கிறபோது தான் தமிழின் பெருமையும் பாதுகாக்கப்படும். அதிலிருந்து தமிழகம் விதிவிலக்காக மாறிவிடக் கூடாது. மாணவர்கள் தேசிய உணர்வைத் தமிழ் மண்ணில் மீண்டும் வலுப்படுத்த வேண்டும். எந்த சூழ்நிலையிலும், யாரிடத்திலும் இழிவுக்கு ஆளாகாத ஒரு தமிழகத்தை உருவாக்கிக் காட்டவும் தேசிய உணர்வு தான் துணை நிற்கும்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12 ஆண்டுகளில், 50 கோடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, அவர்களை வறுமைக்கோட்டுக்குக் கீழான நிலையிலிருந்து மீட்டெடுத்துள்ளார். இது உலக வரலாற்றிலும், மனித இனத்தின் வரலாற்றிலும் ஒரு மகத்தான சாதனை. இவ்வாறு பேசினார்.
தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். கல்லூரி செயலாளர் ஏ.பி.சி.வி.சொக்கலிங்கம், துணைச் செயலாளர் ஏ.பி.சி.வி.சண்முகம், முதல்வர் சொ.வீரபாகு, முன்னாள் மாணவர் பேரவைத் தலைவர் ஏ.வி.முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப சாதனை
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 105-வது நிறுவன நாள் விழாவில், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பொறுப்பை ஏற்றபோது, உலகின் பத்தாவது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, ஐந்தாவது இடத்துக்கு உயர்ந்தது. இன்று நான்காவது இடத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் இலக்கை நோக்கிப் பயணிக்கிறது.
டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்திய போது, ஒரு காய்கறிக் கடையில் இதையெல்லாம் பயன்படுத்த முடியுமா என்று கேள்வி எழுப்பியவர்கள் இருந்தார்கள். ஆனால் இன்று அந்தக் காய்கறிக் கடைக்குச் சென்றால், அங்கிருக்கும் வியாபாரியே, பணத்தை டிஜிட்டல் முறையில் அனுப்பச் சொல்கிறார். கையில் பணத்தை எடுத்துக்கொண்டு சந்தைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இப்போது இல்லை. சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையிலேயே தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள மகத்தான மாற்றத்துக்கு இது ஓர் எடுத்துக்காட்டு. இதை இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்பச் சாதனைகளில் ஒன்றாக நான் கருதுகிறேன்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான, நம்பகமான, பொறுப்பான வங்கிகள் தேவை. இவ்வாறு பேசினார். விழாவில், வங்கியின் தலைவர் கே.ராமச்சந்திரன், நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சலி எஸ்.நாயர், நிர்வாக இயக்குநர் வின்சென்ட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.