சென்னை: எஸ்ஐஆர் படிவங்களில் உள்ள விவரங்களை சரிபார்க்க 12.43 லட்சம் வாக்காளர்களுக்கு அறிவிப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் முழுவதும் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த டிச.19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியல் திருத்தம், ஏற்புரைகள், மறுப்புரைகள் பெறுவது ஆகிய பணிகள் கடந்த டிச.19 தொடங்கி, ஜன.18-ம் தேதி வரை நடைபெறுகின்றன.
தகுதியான குடிமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, கடந்த டிச.27, 28-ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில்,மொத்தம் 7.18 லட்சம் பேர் படிவம் வழங்கியுள்ளனர். அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 50,813 பேர், மதுரையில் 40,551 பேர், செங்கல்பட்டில் 38,124 பேர் படிவங்களை சமர்ப்பித்துள்ளனர்.
இதற்கிடையே, அறிவிப்புக் காலம் மற்றும் விசாரணை நடைமுறையும் கடந்த டிச.19-ம் தேதியே தொடங்கியது. இது பிப்.10-ம் தேதி வரை நடைபெறும். இந்தக் காலத்தில், ஏற்கெனவே வழங்கிய எஸ்ஐஆர் படிவ விவரங்களை உறுதிப்படுத்த வேண்டிய, திருத்தம் மற்றும் சரிபார்ப்பு தேவைப்படும் (2002, 2005 எஸ்ஐஆர் தரவுகளை பூர்த்தி செய்யாதவர்கள்) அனைத்து வாக்காளர்களுக்கும் அறிவிப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 2.38 லட்சம் பேர் உள்பட தமிழகம் முழுவதும் 12.43 லட்சம் வாக்காளர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விசாரணை நாளில், உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதை ஆய்வு செய்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் உரிய உத்தரவை பிறப்பிப்பார்கள். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.17-ம் தேதி வெளியிடப்படும்.