மதுரை: “சினிமா தியேட்டர், பிக்பாஸ் ஷோ போன்ற பொழுதுபோக்கு இடமாக தற்போது தமிழக சட்டப்பேரவை மாறி இருக்கிறது” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
மதுரை ஒத்தக்கடை திருமோகூரில் தமிழ் தேசிய பேரோளி தமிழரசன், நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதா ஆகியோரின் நினைவு தினத்தையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பில், நினைவேந்தல் நிகழ்வு நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசியது: “தமிழகத்தை தமிழர் தான் ஆளவேண்டும். பார்த்து படிக்கும்போது, தவறாக பேசுகின்றனர். கர்ம வீரர் காமராஜரை காமவீரர் என்கிறார்கள். அவர் உயிருடன் இருந்திருந்தால் சட்டபேரவையில் தீக்குளித்து இருப்பார். இங்கு சர்க்கார் பட சுவரொட்டியை கிழித்தது தான் சர்வதேச பிரச்சினை.
மதுரை காமராசர் பல்கலை.யை (காமராசர் பல்கலை கல்லூரி) அரசு கல்லூரியாக மாற்றவேண்டும் என வடக்கு தொகுதி எம்எல்ஏ கல்லாணை பேசுகிறார். பல்கலைக்கும், கல்லூரிக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசும் போன்றவர்களை தற்குறி என்றுதானே கூற முடியும்.
சினிமா தியேட்டர், பிக்பாஸ் ஷோ போன்ற பொழுதுபோக்கு இடமாக தற்போது தமிழக சட்டப்பேரவை மாறி இருக்கிறது. மேட்டூர் அணை கட்டுவதற்கே அன்னைக்கு ரூ.7 கோடி தான் செலவாகி இருக்கும். ஆனால் அந்த அணையில் தண்ணீர் திறக்க செல்வதற்கு ரூ.7 கோடி செலவிடுகின்றனர்.
பூலித்தேவன் போன்ற அனைத்து முக்கிய தலைவர்களுக்கும் மரியாதை செலுத்தும் ஒரே அரசியல் இயக்கம் நாம் மட்டுமே . நாம் வீசும் வலை குளம், குட்டை அல்ல, கடலில் வீசுகிறோம்.
நாம் சாதி, மத அரசியல் செய்யவில்லை. கன்னடர்கள் காவிரிக்கு எதிராக பேசுகின்றனர். தமிழகத்தில் ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்கள் காவிரி பற்றி பேசவில்லை. கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி கேட்க நாதியில்லை. நாங்கள் அமைதியாக இருக்கிறோம் என நினைக்காதீர்கள்.
கரூரில் நடிகரை பார்க்க வந்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம், முதல்வரான பிறகு அரசு வேலை வழங்கியுள்ளனர். முதல்வர் ஆகவில்லை என்றால் என்ன செய்திருப்பீர்கள்? இது என்ன ஆட்சி முறை. அரசு தேர்வாணையம் மூலம் தேர்வெழுதி 70 ஆயிரம் பேர் வேலையின்றி வெளியில் காத்திருக்கின்றனர். கரூரில் இறந்தவர்களுக்கு மட்டும் அரசு வேலை என்றால் விக்கிரவாண்டி, மதுரை மாநாட்டில் இறந்தவர்களுக்கு ஏன் அரசு வேலை தரவில்லை.
கரூர் சம்பவம் குறித்து சிபிஐ 3 முறை விஜய்யை விசாரணைக்கு அழைத்தது. விசாரணையில் என்ன நடந்தது என்பதை ஏன் விஜய் சொல்லவில்லை. நீட் தேர்வு இன்றி ஏற்கெனவே இருந்த தேர்வு முறை சரியாகவே இருந்தது. பழைய மருத்துவர்களிடமே சிகிச்சை பெறுகின்றனர். நீட் தேர்வில் படித்து வரும் மருத்துவர்களிடம் பெரும்பாலும் மக்கள் சிகிச்சை பெறுவதில்லை. பிரதமர் மோடியும் பழைய மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுகிறார்.
நீட் என்பது ஏமாற்று வேலை. அமெரிக்காவிலுள்ள தனியார் முதலாளிகள் நீட் தேர்வை நடத்துகின்றனர். இது பற்றி நாங்கள் மட்டுமே கேள்வி எழுப்புகிறோம். அவதூறுக்கு பிறந்த குழந்தைகளின் பேச்சுக்கு நாம் செவி சாய்க்காமல் பொறுத்து இருந்து நமது இலக்கை அடையவேண்டும்” என்று அவர் பேசினார்.