சென்னை: தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய்யிடம் ஆளுநர் மாளிகையிலேயே பெரும்பான்மையை நிரூபிக்கக் கூறியது அரசியலமைப்பு சட்ட ரீதியாக சரியா, தவறா என சென்னை உயர் நீதிமன்ற சட்ட நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
ஆட்சியமைக்க தவெகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுக்காத விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் கூறும்போது, “பொதுவாக தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது என்றால் ஆளுநர் நேரடியாகவே அந்த கட்சியை ஆட்சியமைக்கும்படி அழைப்பு விடுப்பார்.
தொங்கு சட்டப்பேரவை அமையும் போது கூட்டணி ஆட்சி அல்லது எந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதோ அந்த கட்சி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென அரசியலமைப்பு சட்ட பிரிவுகள் 163 மற்றும் 164 பிரகாரம் ஆளுநர் அழைப்பு விடுப்பார்.
அப்படி அழைப்பு விடுக்கும்போது முதலில் அக்கட்சியின் சார்பில் தேர்வு செய்யப்படும் தலைவருக்கு தமிழக முதல்வராக ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். பிறகு தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டு சட்டப்பேரவையில் அனைத்து எம்எல்ஏ-க்களும் பதவிப்பிரமாணம் எடுப்பர்.
அதன்பிறகே அந்தக் கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறதா, இல்லையா என்பதை வாக்கெடுப்பு முறையில் நிரூபிக்க வேண்டும். இதுதான் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் நிலைநாட்டப்பட்ட சட்டப்பூர்வ வழிமுறை.
தவெக தற்போது 108 இடங்களில் வெற்றி பெற்று அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சியாக முதலிடத்தில் உள்ளது. இந்தச் சூழலில் ஆட்சியமைக்க உரிமை கோரும்போது விஜய் தனக்கான பெரும்பான்மை பலத்தை சட்டப்பேரவையில் நிரூபித்தால் போதும்.
அதை ஆளுநர் மாளிகையில் வைத்து நிரூபித்துக்காட்ட வேண்டிய அவசியமில்லை. விஜய் 118 எம்எல்ஏ-க்களின் ஆதரவை சட்டப்பேரவை தளத்தில் நிரூபித்துக்காட்டி விட்டால் அவர் முதல்வராக தொடர சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லை.
ஆனால் ஒருவேளை விஜய் தனது பலத்தை நிரூபிக்க முடியாவிட்டால் அவரது தலைமையிலான ஆட்சி அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356 பிரகாரம் கலைக்கப்பட்டு, தவெக-வுக்கு அடுத்தபடியாக யார் பெரும்பான்மையை நிரூபிக்கிறோம் எனக் கூறுகிறார்களோ அவர்களுக்கு ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும்.
தனக்குரிய விருப்புரிமை அடிப்படையில் விஜய்யை முதலில் அழைக்க முடியாது என ஆளுநர் ஒருபோதும் கூற முடியாது. அப்படிக்கூறினால் அது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது” என்றார்.
மத்திய அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் கூறும்போது, “தவெக தலைவர் விஜய், அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமென ஆளுநரிடம் நேரடியாக உரிமை கோரவில்லை.
அப்படி கோரியிருந்தால், இந்நேரம் ஆளுநர் தவெகவுக்கு அழைப்பு விடுத்திருப்பார். அவர்களும் சட்டப்பேரவையில் தங்களது பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டியிருக்கலாம். ஆனால், எடுத்த எடுப்பிலேயே எங்களிடம் 107 எம்எல்ஏ-க்கள் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏ-க்கள் எங்களுக்கு ஆதரவு அளித்து கடிதம் அளித்துள்ளனர் எனக் கூறி கூட்டணி ஆட்சி அமைக்கிறோம் என ஆளுநரிடம் கூறியதுதான் சிக்கல்.
காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏ-க்களையும் சேர்த்தால்கூட ஆட்சியமைக்க தேவையான 118 இடங்கள் வரவில்லையே என்பதால் ஆளுநர் பெரும்பான்மையை முதலில் நிரூபியுங்கள், அதன்பிறகு அழைக்கிறேன் எனக் கூறி தவெகவை அழைக்கவில்லை.
இந்த விஷயத்தில் போதிய முன்அனுபவமில்லாமல் தவெகவினர் தங்களுக்கான வாய்ப்பை கோட்டை விட்டுவிட்டு, ஆளுநரை குறைகூறுவது அர்த்தமற்றது” என்றனர்.
முன்னாள் நீதிபதி கருத்து
ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான என். பால்வசந்தகுமார், தமிழகத்தில் தவெக தவிர வேறு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோராத நிலையில், தவெகவை ஆட்சி அமைக்கும்படி ஆளுநர் அழைக்காமல் இருப்பது ஜனநாயக சட்டவிரோதம், என கருத்து தெரிவித்துள்ளார்.
இதேபோல தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினரான வழக்கறிஞர் எம்.வேல்முருகன் தமிழக ஆளுநரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
* தமிழகத்தில் எந்தக் கட்சியும் 118 தொகுதிகளை பெற்றிருக்கவில்லை எனில் அரசியலமைப்பு சட்டத்தின் 4 வழிமுறைகளை பின்பற்றி ஆளுநர் அழைப்பு விடுக்கலாம்.
* தேர்தலுக்கு முன்பே அரசியல் கட்சிகள் ஒன்றாக சேர்ந்து கூட்டணி அமைத்திருந்தால் அந்த கூட்டணியை அழைக்கலாம்.
* அதிக இடங்களை கைப்பற்றியுள்ள கட்சி போதிய ஆதரவுடன் இருந்தால் அந்த கட்சிக்கு அழைப்பு விடுக்கலாம்.
* தேர்தல் முடிந்த பிறகு வெற்றி பெற்ற கட்சிகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்து இருந்தால் அந்த கட்சிகளை அழைக்கலாம்.
* வெளியில் இருந்து பெறப்படும் ஆதரவுடன் பெரும்பான்மையற்ற மைனாரிட்டி ஆட்சியை அமைக்கும் கட்சியை அழைக்கலாம்.
* தற்போது விஜய் அதிக இடங்களை கைப்பற்றியுள்ள கட்சி என்ற அடிப்படையில் ஆட்சியமைக்க உரிமை கோராமல் கூட்டணி ஆட்சி எனக்கூறி காங்கிரஸ் ஆதரவு கடிதத்தையும் சேர்த்து ஆளுநரிடம் கொடுத்ததுதான் வாய்ப்பை நழுவ விட்டதற்கான முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.