தமிழகம்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள் மூவரின் ராஜினாமா ஏற்புக்கு எதிராக வழக்கு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 17-வது சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில், 108 இடங்களைக் கைப்பற்றி, தவெக தனிப்பெரும் கட்சியாகவும், திமுக 59 இடங்களையும், அதிமுக 47 இடங்களையும் கைப்பற்றின. திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடன், தவெக ஆட்சியமைத்தது.

கடந்த மே 13 ஆம் தேதி பெரும்பான்மை வாக்கெடுப்பின் போது, அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள், தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அவர்களுக்கு எதிராக கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகரிடம் மனு அளித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில், மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமாரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா ஆகியோர் தங்கள் எம்எல்ஏ. பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, தவெக-வில் இணைந்தனர். அவர்களின் ராஜினாமா கடிதங்களை அன்றைய தினமே சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். இதுகுறித்த அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தபோது, மூன்று அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொள்ளப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் அதன் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தகுதி நீக்க கடிதம் மீதான நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள போது, அதனை தவிர்க்கும் வகையில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததை ஏற்க முடியுமா? என்ற அரசியல் சாசன கேள்வி எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ள போது, ராஜினாமா கடிதங்களை ஏற்றுக் கொண்டது, கட்சித் தாவல் தடை சட்டத்தையும், மக்கள் தீர்ப்பையும் நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உள்ளது. கட்சித்தாவல், ராஜினாமா காரணமாக அடுத்தடுத்து தேர்தல்கள் நடத்த வேண்டியுள்ளதால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மூன்று எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று பிறப்பித்த சபாநாயகர் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுக்களை விசாரித்து, முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT