மேகேதாட்டு
நாகப்பட்டினம்: காவிரி நீர், மேகேதாட்டு அணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் விஜய்யை, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் அழைப்பு விடுத்ததற்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 2013-ல் தமிழகத்துக்கு கர்நாடகா தண்ணீர் திறக்க மறுத்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கர்நாடக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வராக இருந்த ஜெயலலிதா சென்றார். அப்போது, தமிழகத்தில் நிலவும் வறட்சியை சுட்டிக்காட்டி, கர்நாடகம் தண்ணீர் தர வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தினார். ஆனால், தண்ணீர் திறக்க இயலாது என அப்போது கர்நாடகமுதல்வராக இருந்த ஜெ கதீஷ் ஷெட்டர் மறுத்துவி்ட்டார்.
அதன்பின், இந்த பேச்சுவார்த்தை குறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை சமர்ப்பித்தது. அதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், இனி காவிரி குறித்து எந்த ஒருபேச்சுவார்த்தையிலும் கர்நாடகம், தமிழகம் தனிப்பட்ட முறையில் ஈடுபடக் கூடாது எனவும், தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை விடுவிக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. அதன்பின், பிரதமர் உத்தரவின் பேரில் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில், காவிரி நீர் மற்றும் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக ஆக.3-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த வருமாறு தமிழக முதல்வர் விஜய்க்கு கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் அழைப்பு விடுத்துள்ளார். இது மேகேதாட்டு அணை கட்ட எடுக்கும் முயற்சியை நியாயப்படுத்தும் விதமாக எடுக்கப்படும் நயவஞ்சக நடவடிக்கையாகும்.
மேலும், பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வருக்கு கர்நாடக முதல்வர் அழைப்பு விடுத்திருப்பது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது ஆகும். எனவே, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரின் அழைப்பை தமிழக முதல்வர் விஜய் நிராகரிக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் மட்டுமே காவிரி நீர் தொடர்பாக முடிவெடுக்க முடியும். ஆணையத்தின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு மாநிலமும் காவிரி நீரை பகிர்ந்தளிக்கவும், அணை கட்டுமானம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் இயலாது என்பதை உணர வேண்டும். இவ்வாறு கூறினார்.
இதேபோல் பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: மேகேதாட்டு சிக்கல் குறித்து கர்நாடகாவிடம் பேச்சு நடத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது; இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. மேகேதாட்டு விவகாரம் குறித்து கர்நாடக அரசுடன் முதல்வர் விஜய் பேச்சு நடத்துவது மோசமான பின்னடைவை ஏற்படுத்தி விடும்.
மேகேதாட்டு போன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களில் தமிழக அரசு தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட வேண்டும். சட்டப்போராட்டங்களின் மூலம் மேகேதாட்டு அணை கட்டுவதற்கான சதித் திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு முன்வர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.