தமிழகம்

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனத்துக்கு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு

தவெக அரசின் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக, ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் கே.வெங்கடநாராயணா நியமிக்கப்பட்டுள் ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அவரது நியமனத்தை உடனடியான திரும்பப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: தமிழே தெரியாத வெங்கட நாராயணாவை தமிழகத்தின் பிரதிநிதியாக நியமித்திருக்கிறது தவெக அரசு. மத்திய அரசுக்கும், தமிழகஅரசுக்கும் இடையே ஓர் இணைப்பு பாலமாக செயல்படவேண்டிய பொறுப்பில், தமிழகத்துக்கு சம்பந்தமே இலலாத ஒருவரை எப்படி நியமிக்கலாம். தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் அறியாத ஒருவர் எப்படி தமிழக மக்களின் எண்ணத்தையும், குரலையும் டெல்லியில் எதிரொலிக்க முடியும்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: ‘மேகேதாட்டு அணையை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது’ என கர்நாடக அரசு தொடர்ந்து தெரிவித்து வரும் சூழலில் கர்நாடக பின்னணியை கொண்ட ஒருவரை தமிழகத்தின் டெல்லி பிரதிநிதியாக நியமித்திருப்பது கண்டனத்துக்குரியது. தமிழக அரசு இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்து, வெங்கட நாராயணாவின் நியமனத்தை திரும்பப்பெற வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: திரையுலகில் இருந்து தனக்கு பிரியா விடைகொடுக்கும் நிகழ்வை பிரம்மாண்டமாக நடத்தியதற்காக வெங்கட நாராயணாவுக்கு, தமிழக அமைச்சருக்கு இணையான பதவியை வழங்கி, தான் ஒரு நவீன காலத்து கலிகுலா மன்னன் என்பதை முதல்வர் விஜய் நிரூபித்துள்ளார். வெங்கட நாராயணாவின் நியமனத்தை அரசு திரும்பப்பெற வேண்டும்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு எதிராக போராடி கொண்டிருக்கும் சூழலில், தமிழர் அல்லாத கர்நாடகத்தை சேர்ந்த ஒருவரை தமிழக பிரதிநிதியாக முதல்வர் விஜய் பணியமர்த்தி இருப்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது. அவரை தமிழக அரசு உடனே விடுவிக்க வேண்டும்.

தவாக தலைவர் தி.வேல்முருகன்: டெல்லியில் சிறப்பு பிரதிநிதி பொறுப்புக்கு கர்நாடக முதல்வர் மற்றும் அங்குள்ள அரசியல், தொழில் வட்டாரங்களுடன் நெருங்கிய தொடர்புடைய வெங்கட நாராயணாவை நியமித்திருப்பது ஜனநாயக நம்பிக்கை யையே கேள்விக்குள்ளாக்கியுள் ளது. இந்த சர்ச்சைக்குரிய நியமனத்தை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்து, திரும்பப்பெற வேண்டும்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப. வீரபாண்டியன்: வெங்கட நாராயணா என்ற கன்னடர் தமிழகபிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை தருகிறது. எந்த அனுபவமும் அற்ற, தமிழக அரசியலில் எந்த பங்கும் வகிக்காத, தமிழராக இல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது தமிழர் நலன் எவ்வளவு அலட்சியப்படுத்தப்பட்டு உள்ளது என்பதற்கு சான்றாகும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்: மதுரையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் கூறும்போது, ‘‘தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி வெங்கட நாராயணா, கர்நாடகாவைச் சேர்ந்தவரல்ல, கர்நாடகாவில் தொழில் செய்கிறார். அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். அரசியல் காரணங்களுக்காக கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்கின்றனர். எந்த பதவியும் தவறான நபருக்கு தரப்படவில்லை.

டெல்லியில் ஒரு பிரதிநிதியாக ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்ளப்போகிறார், எந்த பெரிய முடிவுகளும் எடுக்கப் போவதில்லை. கட்சியின் கொள்கை தலைவர்கள், கொள்கை முடிவுகள் எடுக்க உறுதுணை யாக இருந்தவர்கள் ஆலோசகர்களாக இருப்பதில் தவறில்லை. இஸ்லாமிய மதத்துக்கு மாறியவர்களுக்கு சலுகை கிடையாது என்ற நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு விரைவில் மேல்முறையீடு செய்யும்’’ என்றார்.

SCROLL FOR NEXT