சென்னை: தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய், தனது 52-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால், தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் சிறப்பாக கொண்டாடினர்.
கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் தவெகவினர் வழங்கினர். ரத்த தானம், அன்னதானம், மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். முதல்வரின் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன்: தமிழக மக்களுக்கு அர்ப்பணிப்புடனும் தொலைநோக்குப் பார்வையுடனும் தொடர்ந்து சேவையாற்ற நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் அளப்பரிய வலிமை கிடைக்கட்டும்.
பிரதமர் நரேந்திர மோடி: தமிழக முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியத்துக்கும் பிரார்த்திக்கிறேன்.
நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி: தமிழக முதல்வர் விஜய்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தமிழ் மக்களின் உரிமைகள், கண்ணியம் ஆகியவற்றை பாதுகாப்பதிலும், மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து பணியாற்றுவதிலும் நான் உங்களுடன் உறுதுணையாக நிற்பேன்.
ஆளுநர் ஆர்.வி.அர்லேகர்: முதல்வர் விஜய்யின் நல்ல உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட நிறைவான வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன். தமிழக மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்யவும், மாநிலத்தை முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் வளமையை நோக்கி வழிநடத்தவும் தேவையான வலிமை, ஞானம் மற்றும் ஆற்றல் அவருக்கு என்றும் கிடைக்க வேண்டும்.
சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர்: மக்களின் நம்பிக்கையாக, இளைஞர்களின் ஊக்கமாக, தமிழகத்தின் முன்னேற்றப் பாதையாக விளங்கும் முதல்வருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
திமுக தலைவர் ஸ்டாலின்: முதல்வர் விஜய்க்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல், உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்ற விழைகிறேன்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: முதல்வர் விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுள், உடல்நலத்துடன் பணியாற்ற வாழ்த்துகிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: உங்களது தலைமையிலான புதிய அரசு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும், உங்களது மக்கள் பணி சிறந்து பல்லாண்டு வாழவும் மனதார வாழ்த்துகிறேன்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: முதல்வர் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும், தொடர்ந்து பொதுவாழ்வில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி, மத்திய அமைச்சர் எல்.முருகன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, வி த லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதேபோல், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, பி.வெங்கட்ரமணன், மரிய வில்சன், ஆர்.வி.ரஞ்சித்குமார், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, திக தலைவர் கி.வீரமணி, ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோரும் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.