சென்னை: தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகையன்று நடைபெற்ற தொடர் கொலைச் சம்பவங்களுக்கும், சீர்குலைந்துள்ள சட்டம்-ஒழுங்கு நிலைமைக்கும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி: தவெக ஆட்சியில் ஒரே நாளில் காவலர் உள்பட 9 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தை விட பட்டாக்கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு ஆட்சி நடக்கிறது. முதல்வர் ‘ஆய்வு செய்கிறேன்’ என்று சிறைக்குச் சென்றால் கைதிகள் தப்பிக்கிறார்கள்; காவல் நிலையங்களுக்குச் சென்றால் காவலர்களே கொலையாகிறார்கள்.
இந்த ஆட்சியில் பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லை, அவர்களைக் காக்க வேண்டிய காவலர்களுக்கும் பாதுகாப்பில்லை. கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும், பின்னர் அவரை மிரட்டி வீடியோ வெளியிட வைப்பதும் தமிழகம் இதுவரை கண்டிடாத கேவலமாகும். ‘திமுக... திமுக...’ என்று இன்னும் எத்தனை நாட்களுக்கு மக்களை ஏமாற்றுவார் முதல்வர்?
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: வீதியில் நின்றால் கொலை, தட்டிக்கேட்டால் படுகொலை என்னும் அளவுக்கு ரவுடிகளும் குற்றவாளிகளும் அச்சமின்றி நகர்வலம் வரும் அளவுக்கு மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கைத் தள்ளியிருக்கிறது தவெக அரசு. காக்கிச் சட்டைக்கே இங்கு பாதுகாப்பில்லையென்றால், சாமானிய மக்களுக்கு எங்கே பாதுகாப்பு இருக்கும்?
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி: தேனியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், திருவள்ளூரில் இளம்பெண், சமயபுரத்தில் இரு சிறார்கள், திருச்சியில் ஐடி ஊழியர் என பல மாவட்டங்களில் உயிர்கள் பறிபோய் உள்ளன. ஒருபுறம் மக்கள் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்க, இந்த மனிதாபிமானமற்ற ஆட்சியில் மறுபுறம் உயிர்களை இழந்த குடும்பங்களில் மரண ஓலம் கேட்கிறது. இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோனாலும் முதல்வர் வாய் திறக்கப்போவதில்லை. மக்கள் எல்லாவற்றையும் எப்போதும் சகித்துக்கொண்டே இருப்பார்கள் என்று நினைத்துவிடாதீர்கள்.
பாமக தலைவர் அன்புமணி: தீபாவளி நாளில் நடைபெற்ற பெரும்பாலான குற்றச் சம்பவங்களுக்கு மதுவே முக்கியக் காரணம். திருவிழாக் காலங்களில் ஒரு வாரத்துக்கு மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழக அரசு அதைக் கண்டுகொள்ளாததன் விளைவே இந்தப் படுகொலைகள் ஆகும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தலைநகர் சென்னையில் தொடங்கி கடைக்கோடி மாவட்டங்கள் வரை படுகொலைச் சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடைபெறும் அளவுக்குச் சீர்குலைந்திருக்கும் சட்டம்- ஒழுங்கைச் சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், கேளிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முதலமைச்சரையும், தீபாவளி சிறப்புத் தொலைக்காட்சி நிகழ்வுகளில் விருந்தினர்களாகப் பங்கேற்று கொண்டாடி மகிழும் அமைச்சர்களையும் பெற்றிருப்பது தமிழக மக்களின் சாபக்கேடாகும்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: ஒரு மனித உயிருக்கு ரூ.40 லட்சம்தான் மதிப்பா, உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது மட்டுமே அரசின் கடமையல்ல; இதுபோன்ற உயிரிழப்புகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதே உண்மையான பொறுப்பாகும். சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிச் செல்வதும், காவல்துறையினரே வன்முறைக்குப் பலியாவதும் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன.
இதேபோன்று இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து, எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொருளாளர் முஸ்தபா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இச்சம்பவங்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.