தமிழகம்

ஆவின் நெய் உள்ளிட்ட 67 பொருட்களின் விலை உயர்வு - கட்சித் தலைவர்கள் கண்டனம்

செய்திப்பிரிவு

தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை தயாரித்து ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலம் நெருங்கும் நிலையில், ஆவின் பொருட்களைக் கூடுதலாக உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில், நெய், வெண்ணெய், தயிர் உள்ளிட்ட 67 ஆவின் பொருட்களின் விலை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. மூலப்பொருட்களின் விலை, பால் கொள்முதல் செலவு மற்றும் பிற செலவுகள் அதிகரிப்பால் நெய், மில்க் ஷேக் உட்பட 67 ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, 100 கிராம் வெண்ணெய் ரூ.60-ல் இருந்து ரூ.70 ஆகவும், 100 மி.லி. நெய் ரூ.85-ல் இருந்து ரூ.95 ஆகவும், 100 கிராம் ரசகுல்லா ரூ.45-ல் இருந்து ரூ.50 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 250 கிராம் குலோப் ஜாமுன் ரூ.100-ல் இருந்து ரூ.115 ஆகவும், 250 கிராம் மைசூர்பாக் ரூ.140-ல் இருந்து ரூ.160 ஆகவும், 200 மி.லி. லஸ்ஸி ரூ.20-ல் இருந்து ரூ.23 ஆகவும், 500 மி.லி. ஆவின் நெய் ரூ.365-ல் இருந்து ரூ.400 ஆகவும் அதிகரித்துள்ளது.

200 மி.லி. மில்க் ஷேக் விலை ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆகவும், 500 மி.லி. தயிர் ரூ.35-ல் இருந்து ரூ.40 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. 50 கிராம் பிரிமியம் தயிர் கப் ரூ.5-ல் இருந்து ரூ.7 ஆகவும், ஒரு கிலோ பிரிமியம் தயிர் ரூ.120-ல் இருந்து ரூ.130 ஆகவும் அதிகரித்துள்ளது. பெட் பாட்டிலில் விற்கும் மோர் ரூ.12-ல் இருந்து ரூ.14 ஆகவும் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் ஆவின் பொருட்களின் விலை உயர்வுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT