

நாகப்பட்டினம்: இன்னும் 6 மாதங்களுக்குள் இந்த அரசு கலைந்துவிடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 24-ம் தேதி பேசிய நிலையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை கைது செய்து திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது தவெக அரசு.
இதற்கு முன்பும் திமுக தலைவர் இப்படி கூறியபோதுதான் அடுத்த 2 நாளில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். ஆட்சி கலையும் என்று எப்போது ஸ்டாலின் பேசுகிறாரோ, அப்போதெல்லாம் பதிலடியாக கைது அதிர்ச்சி கொடுக்க தயாராக இருக்கிறது தவெக அரசு.
திமுக - தவெக இடையேதான் போட்டி என்று முதல்வர் விஜய் தொடர்ந்து சொல்லிவரும் நிலையில், களமும் அதைத்தான் உணர்த்துகிறது. நடந்து முடிந்த தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் விஜய் தீவிரமாக சுற்றி வந்தாலும்கூட எதிர்பார்த்த வாக்குகள் வித்தியாசத்தில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. திமுக பலத்த போட்டியை கொடுத்து இரண்டாம் இடத்தைப் பெற்றது.
தீபாவளிக்குப் பிறகு மீதமுள்ள 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் தங்களுக்கு போட்டியாக இருக்கும் திமுகவை நிலைகுலைய வைக்க ஊழல் வழக்கில் சிலரை கைது செய்து, மக்கள் மத்தியில் அவர்களை அம்பலப்படுத்த வேண்டும் என்று தவெக கருதுகிறது.
அதிலும் குறிப்பாக ஸ்டாலின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவராகவும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு உற்ற தோழனாகவும் இருக்கும் அன்பில் மகேஸ் முதலில் சிக்கியிருக்கிறார். அதற்கு தோதாக லட்டு போல் கிடைத்தது ரூ.400 கோடி முறைகேடு வழக்கு.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக கூறி, ரூ.400 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக பதியப்பட்ட வழக்கில் அன்பில் மகேஸ் 5-வது நபராக சேர்க்கப்பட்டார். அந்த வழக்கில் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதேபோல நகராட்சி நிர்வாகத் துறையில் பணியாளர் நியமன முறைகேடு விவகாரத்தில் தன் மீது வழக்குப் பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கும் அடுத்ததாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது என்றும் பேசப்படுகிறது. அதாவது, போதைப் பொருள் கடத்தல் வழக்கு, பாலியல் வழக்கு, கொலை வழக்கு என கடந்த 10 நாட்களில் 25-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தவெகவினர் சிக்கியுள்ளது கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திவரும் நிலையில், அவற்றை நீர்த்துப்போக செய்யும் வகையில் திமுகவினர் மீதான இந்த கைது நடவடிக்கைகள் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
அத்துடன், அன்பில் மகேஸ் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று சொல்லப்படும் நிலையில், அவரை ஊழல் புகாரில் கைது செய்வது, 5 தொகுதி இடைத்தேர்தலில் தங்களுக்கு சாதகமான விஷயமாக மாறும் என்பது தவெகவின் கணக்கு. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள திமுக முக்கிய தளகர்த்தர்களை கைது செய்து அடக்குவது அல்லது ஆசை காட்டியோ, மிரட்டியோ தங்கள் கட்சிக்குள் இழுப்பது என்பது தவெகவின் தற்போதைய தாரக மந்திரமாக உள்ளது என்கிறார்கள்.
ஆனால், தவெகவினரோ, “இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடப்பது அல்ல. ஊழல்வாதிகள் மீதான நடவடிக்கை.3 பைல்கள் என் மேஜையில் உள்ளன. அவற்றை திறக்க வைத்து விடாதீர்கள் என்று சொன்ன முதல்வர் விஜய், அதற்கு திமுக விடுத்த சவாலை ஏற்று முதல் பைலை திறந்துள்ளார். இன்னும் 2 பைல்கள் அவரிடம் உள்ளன. அதையும் வெகு விரைவில் திறப்பார். ஊழல் செய்தவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை பாயும்” என்கின்றனர் உறுதியுடன்.