சென்னை: கணவனை இழந்த பெண்ணுக்கு தவெக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆலந்தூர் வடக்கு பகுதி தவெக செயலாளர் வேம்புலி என்பவர், கணவனை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியானது. இது தொடர்பாக வேம்புலி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்: கணவனை இழந்த பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தவெக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
ஒருபுறம் ஆளுங்கட்சி திமிரில், பெண்கள் பாதுகாப்பை தவெகவினர் காவு வாங்கி வருகின்றனர். மறுபுறம், அதிகார மமதையில், ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் போன்றோர் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பேரம் பேசுகின்றனர்.
இப்படி ஒட்டுமொத்தமாக பெண்கள் பாதுகாப்பை சீரழிக்கும் கும்பலை கைகுள்ளேயே வைத்துக்கொண்டு, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று கூற தங்களுக்கு வாய் கூச வில்லையா?
அண்ணாமலை: பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதல்வர் விஜய் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. இதுபோன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையைத் தொடங்கி வைத்து தனி மனித மற்றும் சமூக ஒழுக்கம் குறித்து மேடையில் பாடமெடுத்த முதல்வர் விஜய், தனது கட்சி நிர்வாகிகளுக்கு எப்போது தனிமனித ஒழுக்கத்தை சொல்லித் தருவார்? அவர்களிடம் இருந்து எப்படி பெண்களை பாதுகாக்கப் போகிறார்? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.