சென்னை: மலைப்பகுதிகளில் வீட்டுமனைகளை அமைக்கவும், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவும் ஒப்புதல் வழங்க நகரமைப்பு திட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழலியல் ஆர்வலரான முரளிதரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “நகர்மயமாதல் காரணமாக தொழிற்சாலைகள் பெருகி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டதால் மலைப்பகுதிகளைப் பாதுகாக்கும் நோக்கில் மலைப்பகுதிகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த 1990-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
இந்த ஆணையத்தின் கீழ் உள்ள 597 கிராமங்களில் ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ள முடியாது.
இந்நிலையில் மலைப் பகுதிகளில் வீட்டுமனைகளை அமைக்கவும், கட்டுமானங்களை மேற்கொள்ளவும் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதல் பெறுவதற்குப் பதிலாக நகரமைப்பு திட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கியும், நிலங்களை வகை மாற்றம் செய்ய அனுமதி வழங்கியும்கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணை மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் விதிமுறைகளை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உள்ளது. தமிழக அரசின் இந்த அரசாணையால் மலைப்பகுதிகளின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால், அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
அதுவரை அந்த அரசாணை அடிப்படையில் மலைப்பகுதிகளில் வீட்டுமனைகளை அமைக்கவும், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவும் நகரமைப்பு திட்ட அதிகாரிகள் நேரடியாக ஒப்புதல் வழங்கத் தடை விதிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளி வைத்துள்ளனர்.