சென்னை: நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான கே.மணிவண்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் 2 கோடியே 68 லட்சம் மாற்றுத் திறனாளிகள் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் மாற்றுத் திறனாளிகளுக்கு உயர் கல்வி மற்றும் அரசின் வேலைவாய்ப்புகளில் முறையான இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. தற்போது 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கியும் அதுவும் சரியாக சென்றடையவில்லை.
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இதுதொடர்பாக உரிய சட்டதிருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக மத்திய அரசு நான்கு வார காலத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.