சென்னை: புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பான உயர் நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இதுதொடர்பாக தலைமை நீதிபதியை அணுக மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியுடன் சேர்த்து மொத்தம் 75 நீதிபதிகளுக்கான பணியிடங்கள் உள்ளன. தற்போது 54 நீதிபதிகள் பணியில் உள்ளனர். எஞ்சிய காலியிடங்களை நிரப்ப 13 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க உயர்நீதிமன்ற கொலீஜியம் உச்ச நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரை பட்டியல் அரசியல் சாசன விதிகளுக்கு புறம்பாக உள்ளதால் ரத்து செய்யக் கோரி திருவண்ணாமலையைச் சேர்ந்த வழக்கறிஞரான பிரேம்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விடுமுறை கால அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், பி.தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வரவில்லை என்பதால், மனுதாரர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், இந்த மனுவின் விசாரணை உயர் நீதிமன்ற விடுமுறைக்குப்பிறகு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளதால், இது தொடர்பாக தலைமை நீதிபதியைத்தான் அணுக வேண்டும், என மனுதாரருக்கு அறிவுறுத் தினர்.