சென்னை: முட்டுக்காடு அருகே கோயில் நிலத்தில் ரூ.525 கோடி மதிப்பீட்டில் கலைஞர் சர்வதேச கருத்தரங்க மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், அறநிலையத் துறை விரிவாக பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாடம்பாக்கத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சந்தானம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், “செங்கல்பட்டு முட்டுக்காடு அருகே 37.49 ஏக்கர் பரப்பில் ரூ.525 கோடி மதிப்பீட்டில் கலைஞர் சர்வதேச கருத்தரங்க மையம் கட்டப்பட்டு வருகிறது.
முட்டுக்காடு கிராமத்தில் வேம்படியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 3.08 ஹெக்டேர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்படும் இந்த கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கக் கோரியும் அற நிலையத் துறையிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே கோயில் நிலத்தில் கலைஞர் சர்வதேச கருத்தரங்கு மையம் அமைக்கக்கூடாது என தடை விதிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், “கோயில் நிலங்களை வணிக நோக்கில் பயன்படுத்தக்கூடாது என ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ஆரம்பத்திலேயே அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது 60 சதவீத கட்டுமானங்கள் முடிந்து விட்டதால், அந்த கட்டுமானத்தை அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும்” என வாதிடப்பட்டது. அறநிலையத்துறை தரப்பில், “கோயில் நிலத்தை ஆக்கிரமித்து எந்தவொரு கட்டுமானமும் அங்கு மேற்கொள்ளப்படவில்லை.
சர்வதேச கருத்தரங்கு மையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி இன்னும் முழுமையடைவில்லை. இது தொடர்பாக விரிவாக பதிலளிக்க 2 வார காலம் அவகாசம் அளிக்க வேண்டும்” எனக் கோரப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்.8-க்கு தள்ளிவைத்து உள்ளனர்.