சென்னை: காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக எப்எல்2, எப்எல்3 மதுபான விற்பனை உரிமம் பெற்றுள்ள தமிழ்நாடு பொழுதுபோக்கு கிளப்கள், நட்சத்திர ஓட்டல்கள் சங்கத்தின் செயலாளர் மதுரை எம்.ஜெய்கணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்றத்தில் வனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு பிறப்பித்த உத்தரவுப்படி, டாஸ்மாக் மூலம் விற்கப்படும் மது
பானங்களுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்து, காலி மதுபாட்டில்களை திருப்பி ஒப்படைக்கும்போது அந்த தொகையை கொடுக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இருப்பினும், கடந்த அக்.29-ம் தேதி மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதற்குப் பதிலாக, சுற்றுச்சூழல், சமூகநல வரியாக ரூ.10 விதித்து அதிகபட்ச சில்லறை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் காலி பாட்டில்களை திரும்பப் பெற்று, ஒரு பாட்டிலுக்கு ரூ.10 வீதம் பணத்தை திரும்ப வழங்க ‘ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்’ நிறுவவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மது பாட்டில்களின் அதிகபட்ச சில்லறை விலையை கூடுதல் வரி என்ற அடிப்படையில் உயர்த்துவதால் பொழுதுபோக்கு கிளப், நட்சத்திர ஓட்டல்களின் வணிகம் பாதிக்கும்.
மேலும், கிளப்கள் மீது ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக சுற்றுச்சூழல், சமூகநல வரியை விதிக்க முடியாது. தவிர, டாஸ்மாக்கில் இருந்து கொள்முதல் செய்யப்படும் மதுபானங்களை கிளப் உறுப்பினர்கள், கிளப் வளாகத்துக்குள்ளும் அருந்தலாம் அல்லது வீட்டுக்கும் எடுத்துச் செல்லலாம்.
எனவே, தங்களது உறுப்பினர்களின் வீடுகளில் இருந்து காலி மதுபாட்டில்களை சேகரிக்க வேண்டும் என கிளப்களை நிர்பந்திக்க முடியாது. அது சாத்தியமற்றது.
எனவே, காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக மதுவிலக்கு, ஆயத்தீர்வை ஆணையர் கடந்த 2022-ல் பிறப்பித்த சுற்றறிக்கை தன்னிச்சையானது, நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும்.
கூடுதல் வரி என்ற பெயரில் மதுபானங்களின் விலையை உயர்த்தவும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.