புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

 
தமிழகம்

“புதுச்சேரியில் மின்வெட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு” - அமைச்சர் நமச்சிவாயம் உறுதி

சட்டம் - ஒழுங்கு கட்டுக்குள் உள்ளதாக தகவல்

அ.முன்னடியான்

புதுச்சேரி: “புதுச்சேரியில் சட்டம் - ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. கூடிய விரைவில் மின்வெட்டு பிரச்சனை சரிசெய்யப்படும்” என புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உறுதி அளித்துள்ளார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “நாட்டின் பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து கொண்டிருக்கின்றார். 140 கோடி மக்கள் தொகை இருக்கும் நம் நாட்டில் 10 ஆண்டுகளில், 50 கோடி மக்களை வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களாக உருவாக்கிய பெருமை பிரதமர் மோடியை சாரும்.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சியினர் இந்த ஆட்சியின் மீதும், பிரதமர் மீதும் பொய்யான குற்றச்சாட்டுக்களை மக்கள் மத்தியில் பரப்பி, அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட நினைக்கின்றனர்.

இந்திய நாட்டில் இதுவரை 11 முறை எஸ்ஐஆர் திருத்தப் பணி நடந்துள்ளது. அதில் 10 முறை காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் நடந்தது. அப்படியானால் இந்த 10 முறையும் காங்கிரஸ் வாக்கு திருட்டை நடத்தியதா?

வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து வந்தவர்கள், இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள் குறித்து திருத்தம் செய்யத்தான் இந்த எஸ்ஐஆர் பணி நடந்ததே தவிர, எந்த இடத்திலும் யாருடைய வாக்கும் திருடப்படவில்லை.

தேர்தல் ஆணையரை கைக்குள் வைத்துக்கொண்டு 50 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி வாக்கு திருட்டை வைத்துத்தான் ஆட்சிக்கு வந்தார்களா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமரின் மறைந்த தந்தையை அவமதிக்கும் வகையில் பேசியிருப்பதை பாஜக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்” என்றார்.

தொடர்ந்து அமைச்சர், “ஏதோ ஒருசில இடங்களில் முன்விரோதம் காரணமாக தவிர்க்க முடியாத சில சம்பவங்கள் நடந்துள்ளதே தவிர சட்டம் - ஒழுங்கு புதுச்சேரியில் கட்டுக்குள் இருக்கிறது. காவல் துறையும் சட்டம் - ஒழுங்கு, போக்குவரத்து நெரிசல் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஏதோ ஒருசில இடங்களில் நடப்பதை வைத்து புதிதாக தேர்வான எம்எல்ஏ (திமுக எம்எல்ஏ விக்னேஷ் கண்ணன்) தன்னுடைய இருப்பையும், நானும் அரசியல் செய்கிறேன் என்று மக்கள் மத்தியில் காட்டிக்கொள்ள தவறான செய்தியை கூறுகிறார்.

புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு சிறு தானிய உணவு வழங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் அந்த திட்டம் தொடங்கப்படும். புதுச்சேரி அரசு பல் மருத்துவக் கல்லூரி ஊழியர்களின் ரூ.8.84 கோடி வங்கியில் இருந்து மாயமானது தொடர்பாக சைபர் க்ரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுச்சேரியில் மின்சார டிரான்ஸ்பார்மர், மின் ஒயர்கள் உள்ளிட்டவை பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அதனையெல்லாம் மாற்றுவதற்கு மத்திய அரசின் திட்டத்தின் மூலம் மத்திய அரசின் 60 சதவீதம், மாநில அரசின் 40 சதவீதம் என ரூ.134 கோடி நிதியில் பல்வேறு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

மேலும் மத்திய, மாநிலம் அரசுகளின் மானியம் கொடுத்து 113 மெகாவாட் பி.எம் சூரியகர் திட்டத்தையும் அமல்படுத்தியுள்ளோம். வீடுகளில் 3 கிலோவாட் சூரிய மின்சக்தி தகடுகளை பொறுத்திக்கொள்ளவும் மானியம் அரசு கொடுக்கிறது. மீதியுள்ள தொகை குறைந்த வட்டி மூலம் வங்கிகளில் கடன் பெறுவதையும் அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

எனவே, மின்வெட்டு பிரச்சினை கூடிய விரைவில் சரிசெய்யப்படும். புதுச்சேரியில் மின் பற்றாக்குறை இல்லை. மின்மிகை மாநிலமாகத்தான் இருக்கிறது.

முதல்வர் ரங்கசாமி தலைமையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை புதுச்சேரியில் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம். அதனால்தான் மக்கள் இந்த ஆட்சியை கொண்டு வந்துள்ளனர்.

2016-ல் 15 எம்எல்ஏக்களாக இருந்த காங்கிரஸ் கட்சி 2021-ல் 2 ஆகவும், தற்போது ஒன்றாகவும் குறைந்துள்ளது. ஆகவே முன்னாள் முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து அரசை குறைசொல்லி பேசி வந்தால் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியே இல்லாத நிலையை மக்கள் உருவாக்குவார்” என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT