தென்காசி: கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ, சார்பதிவாளர் உட்பட 6 பேர் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை அருகே உள்ள அக்கமலையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி முருகையா என்பவர், தென்காசி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். அதில், ‘சங்கரன்கோவில் வட்டம், திருமலாபுரம் கிராமத்தில் எனது தந்தை நாகையா, சித்தப்பா பாலு ஆகியோருக்குச் சொந்தமாக 9.70 ஏக்கர் நிலம் இருந்தது. இந்தச் சொத்தை வாரிசுகளுக்கு பிரித்து வழங்காமல், உயில் எதுவும் எழுதாமல் எனது தந்தை நாகையா 2009 அக்டோபர் மாதம் காலமானார்.
கடந்த 2008-ம் ஆண்டு திருமலாபுரத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்பவர், எனது தந்தை பெயரில் உள்ள 2.75 ஏக்கர் நிலத்தை, சார்பதிவாளர் உதவியுடன் மோசடியாக விற்பனைப் பத்திரம் பதிவு செய்துள்ளார். பின்னர், இந்த நிலத்தை விற்பனை செய்வதற்கான அதிகாரத்தை 2012-ம் ஆண்டு தி.மு.ராஜேந்திரனுக்கு (தற்போதைய கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ. மதிமுகவைச் சேர்ந்த இவர் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்) வழங்கியதைத் தொடர்ந்து, 2013-ல் மேலநீலித நல்லூர் சார்பதிவாளர் உதவியுடன் அந்த நிலம் தி.மு.ராஜேந்திரனின் மகன் சித்தார்த்தன் பெயரில் பதிவு செய்யப்பட்டது.
எனது தந்தையின் இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசுரிமைச் சான்றிதழ் இல்லாமலேயே இந்த நிலப்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. செல்லத்துரை பெயரில் பதிவு செய்யப்பட்ட அந்த விற்பனைப் பத்திரத்தில் எனது மூத்த சகோதரர் சேகர் மட்டுமே கையெழுத்திட்டுள்ளார். நானும், மற்ற நான்கு சகோதரர்களும் இந்த விற்பனைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, இந்த ஆவணம் செல்லாது’ என்று கூறியுள்ளார்.
இதன்பேரில், கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ தி.மு.ராஜேந்திரன், செல்லத்துரை, சார்பதிவாளர் உட்பட 6 பேர் மீது தென்காசி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தென்காசிக்கு வந்த அமைச்சர் வி.கே.ராஜீவிடமும் இதுதொடர்பாக முருகையா புகார் அளித்தார்.
சட்டப்படி சந்திப்பேன்
எம்எல்ஏ தி.மு.ராஜேந்திரனிடம் இந்த வழக்கு குறித்து கேட்டபோது, “நாகையா, பாலு சகோதரர்களுக்கு சொந்தமான சொத்தில் நாகையாவின் சொத்தில் பாதியை மதிமுக கிளைச் செயலாளராக உள்ள செல்லத்துரை என்பவர் கடந்த 2008-ல் வாங்கியுள்ளார். அதில் ஒரு பகுதியான 1.69 ஏக்கர் நிலத்தை செல்லத்துரையிடம் இருந்து விற்பனை அதிகாரம் பெற்று, பின்னர், அந்த நிலத்தை எனது மகனுக்கு எழுதி கொடுத்தேன். இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன்” என்றார்.