திருநெல்வேலி தியாகராஜ நகர் பகுதியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட ஆசிரியர்.
படம்: மு. லெட்சுமி அருண்
திருநெல்வேலி: மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. இதனால் தனிப்பட்ட விவரங்களை தெரிவிக்க மறுத்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களிடம் எதிர்வாதம் செய்வதால் திணறல் ஏற்பட்டுள்ளது.
இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தின் அறிவுறுத்தலின்படி, மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகளின் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் முதன்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலராகவும், திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா முதன்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஊராட்சி பகுதிகளுக்கு 8 வருவாய் வட்டாட்சியர்கள் பொறுப்பு அலுவலர்களாகவும், 17 பேரூராட்சி பகுதிகளுக்கு, அந்தந்த பேரூராட்சி செயல் அலுவலர்கள் பொறுப்பு அலுவலர்களாகவும், 3 நகராட்சி பகுதிகளுக்கு நகராட்சி ஆணையாளர்கள் பொறுப்பு அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளுக்கு 2,012 கணக்கெடுப்பாளர்களும், 350 மேற்பார்வையாளர்களும், மாநகராட்சி பகுதிக்கு 731 கணக்கெடுப்பாளர்களும், 125 மேற்பார்வையாளர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இக்கணக்கெடுப்பில் முதல் முறையாக டிஜிட்டல் தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு, https://se.census.gov.in என்ற இணையதளத்தில், தங்களது குடும்ப விவரங்களை முன்கூட்டியே எளிதாகவும், பாதுகாப்பாகவும் பதிவு செய்து, சுய-மதிப்பீட்டு அடையாள எண் (Self Enumeration ID) பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் அது குறித்து பலருக்கு சரிவர தெரியவில்லை என்பதால் இணையதளம் வாயிலாகவும் பெருமளவுக்கு பதிவுகள் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில், கடந்த 1-ம் தேதி முதல் மாவட்டம் முழுவதும் வீடுதோறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் அரசு வழங்கிய அடையாள அட்டையுடன் வீடுதோறும் சென்று விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
ஆனால், கணக்கெடுப்பு குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் பல்வேறு இடர்பாடுகளை கணக்கெடுப்பாளர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
அரசின் சலுகைகள் ரத்தா?
இதுகுறித்து ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வ.பால் கதிரவன் கூறியதாவது: மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான விளம்பரங்களை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும் வகையில் வானொலி, எப்.எம். ரேடியோக்கள், நாளிதழ், ஊடக விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
மேலும், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் ஆட்டோக்களில் ஒலி பெருக்கிகள் மூலம் தெருத்தெருவாக சென்று மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பாக மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.
தற்போது நகர்ப்புறங்களில் ஓரளவுக்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து தெரிந்திருக்கிறது. ஆனால் கிராமப்புறங்களில் விழிப்புணர்வே இல்லை. திருநெல்வேலியில் பெருமாள்புரம், தியாகராஜ நகர் போன்ற நகர்ப்புறங்களில் படித்தவர்கள்கூட தனிப்பட்ட தகவல்களை ஏன் சொல்ல வேண்டும் என்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களிடம் எதிர்வாதம் செய்கின்றனர்.
இந்த வாக்கு வாதத்தால்தான் கடந்த சில நாட்களுக்குமுன் பாளையங்கோட்டை பகுதியில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட பள்ளி தலைமை ஆசிரியை தாக்கப்பட்டுள்ளார்.
படித்தவர்கள் நிறைந்த பகுதியில் அடையாள அட்டைகளுடன் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் சென்றாலும் அதை பலரும் நம்ப மறுக்கின்றனர். பலர் வீடுகளை பூட்டிவிட்டு உள்ளேயே இருந்து விடுகிறார்கள்.
வீட்டிலுள்ள வசதிகள் குறித்தும், தங்களுக்குள்ள அசையும், அசையா சொத்து விவரங்களையும் தெரிவித்தால் எதிர்காலத்தில் தங்களுக்கான அரசின் சலுகைகள் ரத்தாகும் என்று பலரும் அச்சப்பட்டு தகவல்களை தெரிவிக்க மறுக்கின்றனர். முதலில் இந்த அச்சத்தையும், மக்கள் மத்தியிலுள்ள சந்தேகங்கள், குழப்பங்களையும் போக்க வேண்டும்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் என்பதை மக்களுக்கு புரியவைக்கும் வரை கணக்கெடுப்பு சரிவர நடைபெறுமா, உண்மை தன்மை என்ன என்பது குறித்து கேள்விகள் எழும்.
எனவே, மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே தகவல்களை தர மறுக்கமாட்டார்கள். கணக்கெடுப்பு பணிகளும் சீராக நடைபெறும் என்று தெரிவித்தார்.