சென்னை: நூறு நாள் வேலை சட்டத் திருத்தம் குறித்து விவாதிக்கத் தயாரா என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சவால் விடுத்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் மத்திய அரசின் பாரத் 2026 நாள்காட்டியின் தமிழ் பதிப்பை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று வெளியிட்டார்.
இதுவரை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே நாள்காட்டி வெளியிடப்பட நிலையில், இந்த ஆண்டு முதல்முறையாக தமிழ் உட்பட 13 பிராந்திய மொழிகளில் நாள்காட்டி வெளியிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்குப் பின்னர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாரத் 2026 தமிழ் நாள்காட்டியை வெளியிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வரலாற்று சிறப்புமிக்க சட்டமான `விக்சித் பாரத் கேரண்டி ஃபார் ரோஜ்கார் அஜீவிகா மிஷன் கிராமின்' நிறைவேற்றப்பட்டது.
10 மணி நேர விவாதம்: நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவையில் 10 மணி நேரத்துக்கு மேல் விவாதம் நடைபெற்றது. இந்த சட்டம் பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்டது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் விவாதத்தில் பேசினார்கள். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது அவர்களுக்கும் தெரியும். ஆனால், 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு பறித்து விட்டதாக போலி பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
பணி நாட்கள் 100 நாட்களாக இருந்ததை 125 நாட்கள் உயர்த்திக் கொடுக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத் தன்மையோடு இருக்க வேண்டும் என்பதால், ஊராட்சித் தலைவரின் தலையீடு இல்லாமல், பயனாளர்களை கிராம சபை கூட்டங்கள் மூலமாக தேர்வு செய்ய வேண்டும். ஒரு வாரத்துக்குள் ஊதியம் வழங்க வேண்டும் என்று முறைகேடுகள் செய்ய முடியாத அளவுக்கு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
இந்த திட்டத்தில் தமிழகத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. மதுரை, விருதுநகரில் இருந்த போலி பயனாளர்களை எங்கள் கட்சியினர் கண்டுபிடித்து நீக்கியுள்ளனர். மக்களை ஏமாற்ற மீண்டும் குழு ஆனால், தற்போது தேர்தலுக்காக இந்த திட்டத்தை நீக்கி விட்டதாக திமுக மக்களிடம் போலி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
இந்த சட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பை பறித்துள்ளது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னுடன் விவாதிக்கத் தயாரா? 100 நாட்களை 150 நாட்களாக உயர்த்துவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, அதற்காக எதையும் செய்யாமல், பொய்யான வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, மக்களை ஏமாற்ற மீண்டும் குழு அமைத்துள்ளனர்.
வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று முதல்வர் கூறுகிறார். மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு முதல்வர் வசம்தான் உள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வர் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.