வேலூர்: பட்டினப்பாக்கம் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
வேலூர் ஸ்ரீ நாராயணி பீடம் சார்பில் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டப்பேரவை,தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்பட்டால், அங்கு தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பூர்வீக மீனவக் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்டு ரூ.1,200 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக 25.55 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக அரசுச் செயலரால் அரசாணை ஏற்கெனவே வெளியிடப்பட்டுவிட்டது. ஆனால், ஆய்வு தான் நடைபெறுகிறது. இன்னும் அரசாணை வெளியிடப்படவில்லை என அமைச்சர்கள் கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும். மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் பட்டினப்பாக்கம் திட்டத்தை தமிழகஅரசு உடனடியாக கைவிட வேண்டும்.
தமிழகத்தில் சுகாதாரச் சீர்கேடு காரணமாக டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகிறது. இதுவரை 16,830 பேர் பாதிக்கப்பட்டு, சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மின் பற்றாக்குறை, சட்டம்-ஒழுங்கு சீர்கேடும் அதிகரித்துள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய அமைச்சர்கள், தேவையில்லாமல் திணிக்கப்பட்ட இடைத்தேர்தல் பணிகளில் முகாமிட்டுள்ளனர். மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதியைப் பெறுவதற்கு சில வரைமுறைகளும் நிபந்தனைகளும் உள்ளன.
நவோதயா,கேந்திரிய வித்தியாலயா போன்ற மத்திய அரசுப் பள்ளிகள் மூலமாக ஏழை, பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலினப் மாணவ, மாணவிகளுக்குத் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் முதன்மையான நோக்கம். எனவே, தேவையான இடத்தை ஒதுக்கீடு செய்து தந்தால், கேந்திரிய வித்தியாலயா பள்ளியைக்கொண்டு வரத் தயாராக உள்ளோம். வேலூர் விமான நிலையப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. விரைவில் திறக்கப்படும். 2047 வரை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசே தொடர்ந்து நீடிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.