சென்னை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் கும்பாபிஷேக விழா, வரும் செப்.17-ம் தேதி கோலாகலமாக நடைபெறும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோயில் அறங்காவலர்கள், ஆகம வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடைசியாக கடந்த 2009-ம் ஆண்டு ஏப்.8-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு, வருகிற செப்.17-ம் தேதி காலை 7.45 மணி முதல் 8.10 மணிக்குள் கும்பாபிஷேக பெருவிழா நடைபெறவுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், கோயிலைப் புதுப்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
மொத்தம் 186 வகையான திருப்பணிகள், கோயில் நிதி மற்றும் உபயதாரர் நிதி என மொத்தம் ரூ.32.28 கோடி மதிப்பீட்டில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கடந்த 2018-ல் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வீரவசந்தராயர் மண்டபத்தை, அதன் பழமை மாறாமல் மீட்க ரூ.35.30 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த மண்டபத்தின் புனரமைப்புப் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடைய உள்ளன.
மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்களும், உற்சவங்களும் நடைபெறுவதால் அவற்றை நிறுத்த இயலாது. எனவே, திருப்பணிகள் மார்ச் மாதமே முடிவடைந்தாலும், கும்பாபிஷேகத்தை வரும் செப்.17-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில்துறை செயலர் க.மணிவாசன், ஆணையர் பி.என்.தர் மற்றும் அறங்காவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.