கிருஷ்ணசாமி | கோப்புப்படம் 
தமிழகம்

“தென் மாநில முதல்வர்கள் மாநாடு குறித்து எதிர்க்கட்சிகள் அரசிடம் அறிக்கை கோர வேண்டும்”: கிருஷ்ணசாமி

வெற்றி மயிலோன்

சென்னை: தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் நடைபெற்ற விவாதம் குறித்து தமிழக முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் விளக்க அறிக்கை வெளியிட எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்க வலியுறுத்தி திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘கடந்த 20.08.2026 அன்று, மாமல்லபுரம் அருகே உள்ள கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 31 வது தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு நடைபெற்றது. இக்கூட்டம் குறித்த முன்னறிவிப்பு ஏதும் ஊடகங்களுக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரை காவிரி நதிநீர்ப் பிரச்சினை மிகத் தீவிரமாக உள்ள சூழலில் நடைபெற்ற இம்மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் துணைத் தலைவராகப் பங்கேற்றார்; கர்நாடகா, கேரளம், ஆந்திரா, தெலங்கானா,புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களின் முதல்வர்களும் இதில் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டில் தமிழகத்திற்கு உரிய காவிரி நதி நீர் பங்கீடு முறையாக வழங்கப்படாதது மற்றும் கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்ட மேற்கொள்ளும் முயற்சிகள், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த கேரள அரசு அனுமதி மறுப்பது, பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தொடர்ச்சியாக தடுப்பணைகளைக் கட்டி தமிழகத்திற்கு வரும் நீரோட்டத்தைத் தடுப்பது உள்ளிட்ட தமிழக மக்களின் முக்கிய வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து விவாதம் மேற்க்கொள்ளப்பட்டதா?

அதில் என்ன முடிவுகள் எட்டப்பட்டது என்பது பற்றிய விரிவான அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை அத்தகைய அறிக்கை எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை.

எனவே, நாளை (24-ம் தேதி) மீண்டும் தொடரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், தமிழக மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு விவாதம் குறித்து தமிழக முதல்வர் விரிவான விளக்க அறிக்கை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை சட்டப்பேரவையில் வலுவாக எழுப்ப வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT