“தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் பேசியது பற்றி பேரவையில் விஜய் ஏன் விளக்கவில்லை?” - கிருஷ்ணசாமி

கிருஷ்ணசாமி

கிருஷ்ணசாமி

Updated on
1 min read

சென்னை: ‘கோவளம் தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் விஜய் பேசியது குறித்து சட்டப்பேரவையில் விளக்க அறிக்கை சமர்ப்பிக்காதது ஏன்?’ என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘துறை ரீதியான நிதிநிலை அறிக்கைகள் மற்றும் அன்றாடம் எழும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் வினாக்களுக்கு, ஆக்கபூர்வமாகப் பதிலளிக்க வேண்டிய அமைச்சர்களின் அர்த்தமற்ற, திசைதிருப்பும் பதில்கள் 'பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை என்ன?' என்று கேட்பது போல உள்ளன.

நேரலை ஒளிபரப்பில் அவர்களின் இத்தகைய வீராவேசப் பதில்கள் சமூக ஊடக கன்டெண்ட்-களுக்கு பயன்படுமே தவிர, மக்களுக்குக் கிஞ்சித்தும் பயன் தராது.

ஏதாவது ஒரு கட்டத்தில் சட்டப்பேரவை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த வேண்டிய நிலையில் உள்ள பேரவைத் தலைவர், இருதலைக்கொள்ளி எறும்பைப் போல் நியாயத்திற்கும் அநியாயத்திற்கும் இடையே சிக்கித் தவிக்கிறார்.

அமைச்சர்களின் அடாவடியான, அருவருக்கத்தக்க பேச்சுக்கள் லட்சக்கணக்கான மக்களிடையே நேரலையில் சென்றடைந்த பிறகு, அதைக் குறிப்பிலிருந்து நீக்குவது ”குதிரை ஓடிய பிறகு லாயத்தைப் பூட்டுவதற்குச் சமம்”; இதனால் யாருக்கு என்ன பலன்?.

காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை தீவிரமடைந்துள்ள சூழலில், தமிழகத்திலிருந்து எதிர்ப்புகள் எழும் என்று எண்ணி, எவ்வித முன் அறிவிப்புமின்றி, தமிழகத்திலுள்ள கோவளம் பகுதியில், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்னிந்திய முதல்வர்களுடைய மாநாடு நடைபெற்றது.

இதில் மேகேதாட்டு பிரச்சினை, காவிரி நதிநீர்ப் பங்கீடு, பெரியாறு அணைக்கட்டு உயரத்தை 152 அடியாக உயர்த்துவது, ஆந்திராவுடனான பாலாறு குறித்த பிரச்சினைகள் குறித்து தமிழக முதல்வர் பேசியது என்ன? என்பது குறித்து தமிழகச் சட்டப்பேரவைக்கு அறிக்கையாகச் சமர்ப்பித்திருக்க வேண்டுமே, ஏன் முதல்வர் விஜய் அதைச் செய்யவில்லை? இது குறித்து எதிர்கட்சியினர் எவரும் வினா எழுப்பவில்லையே ஏன்?.

கோவளம் மாநாட்டில் முதல்வர் விஜய் பேசியது குறித்து சட்டப்பேரவையில் விளக்க அறிக்கை சமர்ப்பிக்காதது ஏன்?. தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் திசைமாறிப் போகிறதா?’ எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>கிருஷ்ணசாமி</p></div>
“ராகுலின் ‘மாணவர் குரல்’ நிகழ்ச்சியால் பாஜக நிலைகுலைந்து விட்டது”: காங். விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in