கிருஷ்ணகிரியில் நடைபெற்ற எம்ஜிஆரின் 109-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசும் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி.

 
தமிழகம்

“ஷோ காட்டுபவர்கள் அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போகிறார்கள்?” - விஜய்யை போட்டுத் தாக்கிய கே.பி.முனுசாமி

செய்திப்பிரிவு

“தற்போதுள்ள நடிகர்கள் மது அருந்துவார்கள். பாடலுக்கு பெண்களுடன் நடனம் ஆடுவார்கள். 100 பேரை அடிப்பதுபோல ஷோ காட்டுவார்கள். இவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போகிறார்கள்?” என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி விஜய்யை மறை முகமாகத் தாக்கி கேள்வி எழுப்பினார்.

கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 109-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் அசோக்குமார் எம்எல்ஏ தலைமை வகித்தார். கூட்டத்தில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ பேசியதாவது: பொதுமக்களுக்கு நல்ல அறிவுரை வழங்கக்கூடிய கதாபாத்திரத்தில் தான் எம்ஜிஆர் நடித்துள்ளார். குடித்துவிட்டு கும்மாளம் போடும் கதாபாத்திரத்தில் நடித்தது கிடையாது.

மது குடிப்பவனை கண்டித்துத் திருத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் தனது படங்களில் நேர்மை, மனித நேயம், தாய்ப் பாசம் கொண்ட நல்லவராக நடித்தவர். சம்பாதித்த பணம் முழுவதையும் மக்களுக்காக கொடுத்தவர். இயேசு பிரானை நாம் நேரில் பார்த்ததில்லை. ஆனால், அவர் சொன்ன கருத்திற்கு சொந்தக்காரர் எம்ஜிஆர்.

தனது கடைசி காலத்தில்கூட தான் வாழ்ந்த வீட்டை தன்னுடைய உறவினர்களுக்கு கொடுக்கவில்லை. மாறாக, மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்விக்காக வழங்கினார். தற்போதுள்ள நடிகர்கள் மது அருந்துவார்கள், பாடலுக்கு பெண்களுடன் நடனம் ஆடுவார்கள். 100 பேரை அடிப்பதுபோல ஷோ காட்டுவார்கள். அவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போகிறார்கள்?

ஒருவர் என்ன தொழில் செய்கிறார் என்பது முக்கியமில்லை. மக்களை நேசிக்கக் கூடியவராக இருக்கவேண்டும். ஏழை மக்களின் உணர்வுகளையும், அவர்களது நிலைமையையும் அறிந்து கொண்டு அவர்களுக்காக போராடக்கூடிய சிந்தனையுள்ள தலைவன் கட்சி நடத்தி, ஆட்சிக்கு வர வேண்டும். அப்படிப்பட்ட சிந்தனையுடைய தலைவர் அதிமுக-வை உருவாக்கியது மட்டுமில்லாமல் கட்சியில் உள்ள ஒவ்வொரு தொண்டனையும் அதே சிந்தனையோடு உருவாக்கியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT