கோடநாடு எஸ்டேட்
கோப்புப்படம்
ஊட்டி: கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு விசாரணையை டிசம்பர் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்த ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றம், அன்றைய தினம் வழக்கின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி காவலாளி ஓம்பகதூர்
கொலை செய்யப்பட்டு, ஆவணங்கள் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீஸார் கைது செய்தனர்.
இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையிலான போலீஸாரும், குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் வாளையாறு மனோஜ் மற்றும் ஜித்தின் ஜாய் ஆகியோரும் ஆஜராகினர்.
விசாரணையின்போது, குஜராத் தடயவியல் ஆய்வகத்தில் செல்போன் உரையாடல்கள், எண்கள் மற்றும் கோபுர (’டவர்’) தகவல்கள் குறித்து நடைபெற்று வரும் ஆய்வு விவரங்கள் நீதிபதியிடம் எடுத்துரைக்கப்பட்டன. மேலும், கூடுதல் விசாரணைக்காக சிபிசிஐடி தரப்பில் காலஅவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, விசாரணையை டிசம்பர் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.