கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 63-வது மலர்க் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்ட திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் உள்ளிட்டோர். (அடுத்த படம்) பன்முக திறனை வெளிப்படுத்தும் மலர் மங்கை.
பழநி: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 63-வது மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில், ஒரு லட்சம் கார்னேஷன், ரோஜா மலர்களால் அமைக்கப்பட்ட பாம்பன் பாலம், தஞ்சை பெரிய கோயில், ஜல்லிக்கட்டு ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன.
‘மலைகளின் இளவரசி’ என்றழைக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. தமிழகத்தில் இன்னும் துறை சார்ந்த அமைச்சர் நியமிக்கப்படாததால் இந்தாண்டு மலர் கண்காட்சி மற்றும் கோடை விழாவுக்கான தேதியை முடிவு செய்வது, நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் திடீரென நேற்று (மே 20) 63-வது மலர் கண்காட்சி தொடங்கும் என முதல்நாள் இரவு அறிவிக்கப்பட்டு, நேற்று காலை கண்காட்சி தொடங்கியது. இதனை ஆட்சியர் சரவணன் தொடங்கி வைத்தார். கொடைக்கானல் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் சந்திரகவிதா, கோட்டாட்சியர் கீர்த்தனா, மாவட்ட சுற்றுலாஅலுவலர் கோவிந்தராஜ், மாவட்ட வன அலுவலர் அரவிந்த்,நகராட்சி ஆணையர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மலர் கண்காட்சியையொட்டி நடவு செய்யப்பட்டிருந்த ரெனன்குலஸ், கிளாக்சினியா, ஹைப்போயெஸ்டெஸ், கோச்சியா உள்ளிட்ட 85 வகையான 6 லட்சம் செடிகளில் மலர்கள் பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கியதால் பூங்கா முழுவதும் வண்ணமயமாக காட்சி அளித்தது.
பல வண்ண ரோஜாக்களால் புவிசார் குறியீடு பெற்ற திண்டுக்கல் பூட்டு நுழைவு வாயில் அமைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியின் சிறப்பு அம்சமாக பாம்பன் பாலம், தஞ்சை பெரிய கோயில், ஜல்லிக்கட்டு காளையை வீரர் அடக்குவது, பன்முக திறமையின் சின்னம் ஆகியவை ஒரு லட்சம் கார்னேஷன், ரோஜா மலர்களால் அமைக்கப்பட்டிருந்தது. பல்வேறு அரசு துறைகள் சார்பில் 20-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
12 நாட்களுக்கு கண்காட்சி நடைபெறுகிறது. பார்வையாளர்கள் அனுமதிக்கும் நேரம் காலை 8 முதல் இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 80, சிறுவர்களுக்கு ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலாத் துறை சார்பில் நடத்தப்படும் கோடை விழாவை நாளை (மே 22) முதல் மே 31-ம்தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டை போல், இந்தாண்டும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், படகு அலங்காரப் போட்டி, ‘பாரா செயிலிங்’ எனும் பாராசூட் சாகச நிகழ்ச்சி, ராட்சத காற்றாடி திருவிழா, நாய்கள் கண்காட்சி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இதில் அமைச்சர், அதிகாரிகள், எம்.பி. எம்எல்ஏ மற்றும் முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.