பிடிபட்ட இலங்கை கடற்கொள்ளையர் அயந்தன்.
நாகப்பட்டினம்: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, தற்போது மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டு அழைத்து வரப்பட்ட இலங்கை கடற்கொள்ளையர் குறித்த அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன.
கடந்த 26-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற நாகை மீனவர்களை தாக்கி உடமைகளை கொள்ளையடித்த போது ஏற்பட்ட மோதலில் இலங்கையைச் சேர்ந்த 3 கடற்கொள்ளையர்களில் ஒருவரை மீனவர்கள் சிறைபிடித்தனர். மற்ற இருவரும் படகில் தப்பினர்.
பிடிபட்ட நபர் இலங்கை காங்கே சன்துறையைச் சேர்ந்த அயந்தன் என்பது தெரியவந்தது. பின்னர் அவரை கீழையூர் போலீஸாரிடம் மீனவர்கள் ஒப்படைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், அயந்தன் குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரின் உண்மையான பெயர் அஜந்தன்என்பதும், இலங்கை பலாலியில் வசிப்பதும் தெரியவந்தது.
மேலும், கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீதான பெரும்பாலான தாக்குதலுக்கு இந்த அஜந்தன் மற்றும் அவரது சகோதரர்கள், சகோதரியின் மகன்கள்தான் காரணம் என்று கூறப்படுகிறது.
இவர்கள் தொடர்ச்சியாக தமிழக மீனவர்களைத் தாக்கி கொள்ளையடிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் மீது இலங்கையில் கஞ்சா கடத்தல், அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.
அங்கு போலீஸ் கெடுபிடி அதிகமாக இருக்கும்போது கடலுக்கு வந்து, தமிழக மீனவர்களை தாக்கி பொருட்களை கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
சம்பவம் நடந்த அன்று தப்பிச் சென்ற அவரது சகோதரியின் மகன்கள் 2 பேர், தங்கள் சொந்த ஊருக்கு செல்லாமல் தலைமறைவாகி விட்டனர். அவர்களை அங்குள்ள சிஐடி போலீஸார் தேடி வருகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை அமைச்சர் கண்டனம் இதனிடையே இந்த விவகாரம் குறித்து இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் இலங்கை மீனவர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டிருப்பது மனித உரிமை மீறலாகும்.
இச்செயல் இருநாடுகளிடையே நிலவும் பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி சட்டவிரோதமாக மீன்பிடித்தாலும் இலங்கை மீனவர்கள் பெரும்பாலும் அவர்களை சகோதரத்துவ உணர்வுடன் அணுகி அமைதியான முறையில் நடந்து கொண்டுள்ளனர்.
தற்போது இலங்கை மீனவர் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.