மதுரை: சட்டக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுத உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பாளையங்கோட்டை ஆரியகுளம் பகுதியைச் சேர்ந்த ஷைனி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கீழவல்லநாட்டில் மகளிர் சட்டக் கல்லூரி உள்ளது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
கல்லூரியில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் தலா 60 மாணவர்களை சேர்க்க பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.
நான் 2025-26 ஆண்டில் நிர்வாக ஒதுக்கீட்டு இடத்தில் சேர்ந்தேன். தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், 60 மாணவர்களுக்கு மட்டும் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நான் உட்பட மீதமுள்ள மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டில் என்னைப் போல் பல்வேறு மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தற்போது தேர்வு நெருங்கும் நிலையில் எங்களுக்கு தேர்வு எழுதவும் தேர்வுக் கட்டணம் செலுத்தவும் அனுமதிக்கவில்லை.
இதனால் எங்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே 2025–2026 கல்வியாண்டுக்கான சட்டக்கல்வித் தேர்வில் பங்கேற்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு சட்டக் கல்லூரிகளின் மாணவிகளும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி மும்மினேனி சுதீர்குமார் விசாரித்தார்.
பின்னர் நீதிபதி, மாணவ மாணவியர்கள் பல்கலைக்கழக தேர்வு எழுத அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை முடித்து வைத்தார்.