குடியரசு துணைத் தலைவர் வருகையை முன்னிட்டு ராமேசுவரம் ஆலய விடுதி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எஸ்.பி. சந்தீஷ் மற்றும் அதிகாரிகள்.
ராமேசுவரம்: ராமேசுவரத்தில் நாளை (டிச. 29) நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன், ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இதையொட்டி, ராமேசுவரம் பகுதியி்ல் இன்றும், நாளையும் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காசி தமிழ் சங்கமம் நிறைவு விழா நாளை (செவ்வாய்கிழமை) ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஆலய விடுதி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்நிலையில், காசி தமிழ் சங்கமம் நடைபெற உள்ள ஆலய விடுதி வளாகத்தை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குடியரசுத் துணைத் தலைவர் சாலை மார்க்கமாக வரும்போது மதுரை- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில், மண்டபம் ஹெலிபேட்டிலிருந்து ராமேசுவரம் வரையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டு குடியரசுத் துணைத் தலைவர் நிகழ்ச்சிக்கான மேடையை வந்தடைந்ததும் மீண்டும் போக்குவரத்து தொடங்கப்படும்.
700 போலீஸார் பாதுகாப்பு: மீண்டும் அவர் புறப்பட்டுச் செல்லும்போது போக்குவரத்து நிறுத்தப்படும் என்பதால், பொதுமக்கள் தங்களது பயணங்களை அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். காசி தமிழ்ச் சங்கமம் நிறைவு விழாவில் 5 ஆயிரம் பேர் கலந்துகொள்ள உள்ளனர். இதையொட்டி, 700 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
குடியரசுத் துணைத் தலைவர் வருகையையொட்டி பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் 29, 30-ம் தேதிகளில் (இன்றும் நாளையும்) ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விடுவோர் மீது வழக்குப் பதிவு செய்து, ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு எஸ்.பி.சந்தீஷ் கூறினார்.