விஜய் | கோப்புப் படம்

 
தமிழகம்

தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் - வேகமெடுக்கும் கரூர் நெரிசல் வழக்கு

டெல்லியில் செவ்வாய்க்கிழமை ஆஜராக அழைப்பு

அனலி

புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி விஜய் நாளை (மார்ச் 10) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரூரில் கடந்த் ஆண்டு செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் டெல்​லி​ சிபிஐ தலைமை அலு​வல​கத்​தில் கடந்த 12-ம் தேதி ஆஜரா​னார். அப்போது அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசா​ரணை நடத்​தப்​பட்​டது. பின்னர் 19-ம் தேதி ஆஜாரக சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து அன்றைய தினம் மீண்டும் அவர் ஆஜரா​னார். அன்று காலை 10.30 மணிக்கு விசாரணை தொடங்​கி 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

          

அப்போதே விஜய்யின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்ப்பு, விஜய் கைதாக வாய்ப்பு என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின. ஆனால் ஊகங்கள் பொய்க்க அவர் விசாரணை முடிந்து சென்னை திரும்பினார்.

அதேவேளையில், 2-வது முறையாக விஜய் ஆஜரானபோது சில கேள்வி​களுக்​கான ஆதா​ரங்​களை சமர்ப்​பிக்க அவரது தரப்​பில் கூடு​தல் அவகாசம் கேட்​கப்​பட்​ட​தால், அவர் மீண்டும் விசா​ரணைக்கு அழைக்​கப் படலாம் என்​றும் கூறப்பட்டது.

இந்நிலையில், விஜய் நாளை (மார்ச் 10) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து சிபிஐ அலுவலக வட்டாரங்களில், ‘கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணையில் சில விவரங்கள் கிடைத்துள்ளன. அது தொடர்பாக விஜய்யிடம் மேலும் விசாரித்து, தெளிவு பெற வேண்டியுள்ளது. இதன் நிமித்தமாகவே அவர் மார்ச் 10-ல் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது’ எனக் கூறப்படுகிறது.

இருப்பினும், இதன் பின்னணியில் அரசியல் அழுத்தங்கள் இருக்கலாமோ என்ற சந்தேகங்களை சிலர் எழுப்பி வருகின்றனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாகக் களம் காண திட்டமிட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும் திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் தவெக தனித்து நிற்கிறது. தவெகவை தங்கள் கூட்டணிக்கு வருமாறு தமிழக பாஜக தரப்பில் காய் நகர்த்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் விஜய்க்கு சிபிஐ அலுவலகம் சம்மன் அனுப்பியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

SCROLL FOR NEXT